டெல்லி: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சோனியா காந்தி, உடல்நலக்குறைவு காரணமாக டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ள தகவலின்படி, சோனியா காந்தியின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது. அவர் நெஞ்சகப் பிரிவு மருத்துவ நிபுணர்களின் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களாக அவர் தீராத இருமல் பிரச்சினையால் அவதிப்பட்டு வந்ததாகவும், திங்கள்கிழமை மாலை அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டதாகவும் கூறப்படுகிறது. டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசு காரணமாக அவருக்கு இந்த சுவாசக் கோளாறு மற்றும் இருமல் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சோனியா காந்தி கடந்த சில ஆண்டுகளாகவே பல்வேறு உடல்நலப் பாதிப்புகளைச் சந்தித்து வருகிறார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் வயிற்றுப் பகுதியில் ஏற்பட்ட தொற்று காரணமாக இதே மருத்துவமனையில் நான்கு நாட்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். அதே மாதம் சிம்லாவிற்குச் சென்றிருந்தபோது, லேசான உடல்நலக்குறைவு காரணமாக அங்குள்ள இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரியில் வழக்கமான பரிசோதனைகளை மேற்கொண்டார். கடந்த டிசம்பர் மாதத்தில்தான் அவர் தனது 79-வது பிறந்தநாளைக் கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
