புதுடெல்லி: கடந்த 2004-2009 வரை ஒன்றிய ரயில்வே அமைச்சராக லாலு பிரசாத் பணியாற்றிய போது, ரயில்வேத்துறையில் குரூப்-டி பணிக்கு பணியாளர்களை தேர்வு செய்ய அவர்களுக்கு சொந்தமான நிலங்களை லாலு பிரசாத் யாதவ் அவரது குடும்ப உறுப்பினர்களின் பெயர்களுக்கு மாற்றியதாக குற்றச்சாட்டு உள்ளது. அதன்படி டெல்லி, பாட்னா, காசியாபாத் உள்ளிட்ட இடங்களில் இருந்த பெரும்பாலான இடங்கள் லாலுவின் மனைவி, மகள், மகன்கள் ஆகியோர் பெயருக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. மேலும் இவ்வழக்கின் விசாரணை டெல்லியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், லாலு பிரசாத் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து மேற்கண்ட சிறப்பு நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக லாலு பிரசாத் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவானது டெல்லி உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஸ்வர்ன காந்தா சர்மா அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது லாலு பிரசாத் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல் மற்றும் மணிந்தர் சிங்,‘‘ இந்த விவகாரத்தில் விசாரணை நீதிமன்றத்தின் விசாரணை மற்றும் முன்னதாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவு ஆகியவைக்கு தடை விதிக்க வேண்டும் என்று தெரிவித்தனர். ஆனால் அதனை ஏற்க மறுத்த நீதிபதி, இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து, வழக்கின் விசாரணையை வரும் 14ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
