×

முதல்முதலாக இந்தியாவிலேயே வடிவமைத்து தயாரிக்கப்பட்ட மாசுக் கட்டுப்பாட்டு கப்பல் சமுத்திர பிரதாப் அர்ப்பணிப்பு

பனாஜி: உள்நாட்டில் கட்டப்பட்ட முதல் மாசுக்கட்டுப்பாட்டு கப்பலான ‘சமுத்திர பிரதாப்’-ஐ பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நாட்டிற்கு அர்ப்பணித்தார். இந்திய கடற்பரப்பில் அதிகரித்து வரும் கப்பல் போக்குவரத்து மற்றும் சுற்றுச்சூழல் சவால்களை கையாள, ‘சமுத்திர பிரதாப்’ மாசுக்கட்டுப்பாட்டு கப்பல் உருவாக்கப்பட்டுள்ளது. கோவா ஷிப்யார்ட் லிமிடெட் நிறுவனத்தால் கட்டப்பட்ட இந்த கப்பல் உள்நாட்டிலேயே வடிவமைத்து கட்டப்பட்ட முதல் மாசுக்கட்டுப்பாட்டு கப்பல் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கப்பல் கடந்த டிசம்பர் மாதம் கடலோரா காவல் படையிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில், தெற்கு கோவாவில் வாஸ்கோவில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், சமுத்திர பிரதாப் கப்பலை ஒன்றிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நாட்டிற்கு அர்ப்பணித்தார்.

அப்போது அவர் பேசுகையில், ‘‘கடல் வளங்கள் எந்த ஒரு நாட்டிற்கும் சொந்தமானவை அல்ல. அவை மனிதகுலத்தின் பகிரப்பட்ட பாரம்பரியம் என்று இந்தியா நம்புகிறது. பாரம்பரியம் பகிரப்படும்போது, அதன் பொறுப்பும் பகிரப்படுகிறது. இதனால்தான் இந்தியா இன்று ஒரு பொறுப்பான கடல்சார் சக்தியாக மாறியுள்ளது. சமுத்திர பிரதாப் இந்தியாவின் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட முதல் மாசுக் கட்டுப்பாட்டுக் கப்பல். இதுவரை கடலோர காவல்படை கப்பல் தொகுப்பில் உள்ள மிகப்பெரிய கப்பல் இதுதான். உள்நாட்டில் கட்டப்பட்ட இந்த கப்பல், தற்சார்பு இந்தியா திசையில் ஒரு வலுவான முன்னேற்றம். மேக் இன் இந்தியா திட்டத்தின் உண்மையான அர்த்தம் இது போன்ற திட்டங்களில் தெளிவாகத் தெரிகிறது’’ என்றார்.

114.5 மீட்டர் நீளமுள்ள இந்த கப்பல் 4,200 டன் எடையுடன் 22 நாட்டிக்கல் மைல் வேகத்தில், 6,000 நாட்டிக்கல் மைல் தூரத்திற்கு பயணிக்கும் திறன் கொண்டது. இது கடல்சார் மாசுக் கட்டுப்பாட்டு விதிமுறைகளை அமல்படுத்துதல், கடல்சார் சட்ட அமலாக்கம், தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் மற்றும் இந்தியாவின் பிரத்யேக பொருளாதார மண்டலத்தைப் பாதுகாத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும். கடல் பரப்பில் திடீரென ஏற்படும் எண்ணெய் கசிவு மற்றும் இதர ரசாயன மாசுக்களை கண்டறிந்து அவற்றை உடனடியாக அகற்றும் அதிநவீன தொழில்நுட்பங்களுடன் இந்த கப்பல் வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : India ,Defence Minister ,Rajnath Singh ,
× RELATED 1980களில் கிரிக்கெட் வீரருடனான உறவின்...