திருவனந்தபுரம்: மேயர் பதவி தருவதாக கூறி பாஜ என்னை ஏமாற்றிவிட்டது என்று திருவனந்தபுரம் மாநகராட்சியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கேரள முன்னாள் டிஜிபி ஸ்ரீலேகா கூறினார். கேரளாவில் சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் திருவனந்தபுரம் மாநகராட்சியை பாஜ கைப்பற்றியது. 100 வார்டுகளுக்கு நடந்த தேர்தலில் பாஜ கூட்டணி 50 இடங்களில் வெற்றி பெற்றது. இடதுசாரி கூட்டணி 29 வார்டுகளிலும், காங்கிரஸ் கூட்டணி 19 வார்டுகளிலும் வெற்றி பெற்றது. 2 வார்டுகளில் சுயேட்சைகள் வெற்றி பெற்றனர்.
மாநகராட்சியை கைப்பற்ற 51 வார்டுகள் தேவையாகும். ஒரு சுயேச்சை வேட்பாளரின் ஆதரவை பெற்று திருவனந்தபுரம் மாநகராட்சியை பாஜ கைப்பற்றியது. திருவனந்தபுரம் மாநகராட்சியில் பாஜ சார்பில் மாநில துணைத்தலைவரான முன்னாள் டிஜிபி லேகாவும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பாஜ சார்பில் ஸ்ரீலேகா தான் மேயர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டார். ஆனால் இக்கட்சியின் முன்னாள் திருவனந்தபுரம் மாவட்ட தலைவரான வி.வி. ராஜேஷுக்கு மேயர் பதவி வழங்கப்பட்டது. இது ஸ்ரீலேகாவுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்நிலையில் தனக்கு மேயர் பதவி கிடைக்காத அதிருப்தியை ஸ்ரீலேகா வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
அவர் கூறியது: திருவனந்தபுரம் மாநகராட்சி தேர்தலில் நான் போட்டியிட மாட்டேன் என்று தான் பாஜ தலைமையிடம் கூறினேன். ஆனால் மேயர் ஆக்குவதாக என்னிடம் வாக்குறுதி அளித்ததால் தான் நான் தேர்தலில் போட்டியிட்டேன். எனவே எனக்கு மேயர் பதவி கிடைக்கும் என்று நான் நம்பினேன். ஆனால் என்ன காரணத்தாலோ கடைசி நிமிடத்தில் எனக்கு அந்தப் பதவி கிடைக்க வில்லை. போடா என்று என்னால் கூறிவிட்டு சென்றிருக்க முடியும். ஆனால் கட்சி தலைமையின் முடிவுக்கு நான் கட்டுப்பட விரும்புவதால் நான் அவ்வாறு செய்ய விரும்பவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
