×

பெண்களின் வளர்ச்சியை மேலும் வலுப்படுத்தும் வகையில் ஐ.நா-தமிழ்நாடு அரசு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நடந்தது

சென்னை: சென்னை தலைமை செயலகத்தில் திட்டம் மற்றும் வளர்ச்சி துறை சார்பில் மாநிலத்தில் பெண்களின் நலன், பாலின சமத்துவம் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை நோக்கிய முயற்சிகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நேற்று, ஐக்கிய நாடுகள் பெண்கள் அமைப்பிற்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. மேலும், பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டிற்கான அமைப்பு, பொதுத்துறை கண்டுபிடிப்புகளின் கண்காணிப்பகம், ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் ஆகிய அமைப்புகளுடன் தமிழ்நாடு அரசின் மாநில திட்ட குழுவுக்கும் இடையேயான முத்தரப்பு ஒத்துழைப்பு மேற்கொள்ளப்பட்டது.

அத்துடன் தமிழ்நாடு மாநில குறிக்காட்டி வரையறை-2.0வை வெளியிட்டு, மாநில திட்டக்குழுவால் தயாரிக்கப்பட்ட 4 ஆய்வறிக்கைகளையும் முதல்வர் பெற்றுக் கொண்டார். ஐ.நா. பெண்கள் அமைப்பு மற்றும் தமிழ்நாடு அரசின் திட்டம் மற்றும் வளர்ச்சி துறையுடனான இந்த புரிந்துணர்வு ஒப்பந்தமானது, பாலினப் பாகுபாடற்ற ஆளுகை மற்றும் திட்டமிடலுக்கான நிறுவன திறன்களை மேம்படுத்=துவதை நோக்கமாக கொண்டுள்ளது. பாலின சமத்துவ முன்னோக்குடன் நீடித்த வளர்ச்சி இலக்குகளை அடைதல், பாலின பாகுபாடற்ற திட்டமிடல் மற்றும் வரவு செலவு திட்டத்தை வலுப்படுத்துதல், பொருளாதார வலுவூட்டலுக்கான வாய்ப்புகளை பெண்களுக்கு ஏற்படுத்துதல் போன்றவை இந்த ஒப்பந்தத்தின் குறிப்பிடத்தக்க அம்சங்கள் ஆகும். இவற்றை செயல்படுத்திட ஐ.நா. பெண்கள் அமைப்பு தமிழ்நாடு அரசிற்கு தொழில்நுட்ப ஆதரவு வழங்க ஒப்புக் கொண்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் புத்தாக்க அலுவலகம், பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டிற்கான அமைப்பு – பொதுத்துறை கண்டுபிடிப்புகளின் கண்காணிப்பகம் மற்றும் தமிழ்நாடு அரசின் மாநில திட்ட குழுவுக்கும் இடையேயான முத்தரப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் செய்துள்ளது. சுவீடனில் உள்ள ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் புத்தாக்க அலுவலகம், உலகளவில் தமிழ்நாட்டினை துணை தேசிய அளவிலான முதல் மாநிலமாக தேர்வுசெய்து, தமிழ்நாடு மாநில திட்டக்குழுவுடன் 6 மாத காலத்திற்கான முத்தரப்பு ஒப்பந்தத்தினை ஏற்படுத்த முன்மொழிந்துள்ளது. இம்முயற்சி, தமிழ்நாட்டின் தொலைநோக்கு பார்வைக்கு ஏற்றவாறு அனைவரையும் உள்ளடக்கிய சமூக வளர்ச்சிக்கும், பொது சேவை வழங்கலை மேம்படுத்தவும், சீரமைத்து ஒருங்கிணைக்கவும் உதவும்.

தற்போது நடைமுறையில் உள்ள 2020ம் ஆண்டில் வடிவமைக்கப்பட்ட மாநில குறிக்காட்டி வரையறை-1.0-ஐ மறுவரையறை செய்துள்ளது. தமிழ்நாடு மாநிலக் குறிக்காட்டி வரையறை-2.0 என்ற பெயரில் இறுதி செய்யப்பட்டுள்ள இந்த வரையறையில் 17 நீடித்த வளர்ச்சி இலக்குகளுக்கான 244 குறிக்காட்டிகள் இடம்பெற்றுள்ளன. முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு மாநில குறிக்காட்டி வரையறை-2.0வை வெளியிட்டார். அதன்படி, மாநில திட்டக்குழுவால் தயாரிக்கப்பட்ட 1) சுற்றுச்சூழல் அமைப்பு சேவைகளின் பொருளாதார மதிப்பீடு – தமிழ்நாட்டின் முன்னுரிமை அளிக்கப்பட்ட 61 ஈரநிலங்கள்/நீர்நிலைகள் பற்றிய ஆய்வு, 2) தமிழ்நாட்டின் புறநகர் பகுதிகளின் அமைப்பு மற்றும் நிலையான புறநகர் மேலாண்மை கட்டமைப்பை மேம்படுத்துதல், 3) முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் பசுந்தாள் உரமிடுதல் மீதான மதிப்பீட்டாய்வு, 4) தமிழ்நாட்டின் வளர் இளம் பெண்களிடையே நீடிக்கும் ரத்த சோகை: செயல்பாட்டு இடைவெளிகளும் பாதிப்புகளும் ஆகிய 4 அறிக்கைகளை மாநில திட்டக்குழுவின் செயல் துணைத்தலைவர் ஜெ.ஜெயரஞ்சன் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நேற்று வழங்கினார்.

Tags : UN ,Tamil Nadu government ,Chief Minister ,MK Stalin ,Chennai ,Planning and Development Department ,Chennai Secretariat ,United Nations Women… ,
× RELATED ஊட்டி அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை...