×

ஐயப்பன் கோயில் திருட்டு விவகாரம் கடவுளை கூட விட்டு வைக்கவில்லையா? உச்ச நீதிமன்றம் கடும் அதிருப்தி

புதுடெல்லி: கேரளாவின் சபரிமலையில் உள்ள புகழ்பெற்ற ஐய்யப்பன் கோவிலில் கடந்த 2019ல் புனரமைப்பு பணிகள் நடந்தன. கருவறை முன்பிருந்த துவார பாலகர் சிலைகள் மற்றும் கதவுகளில் பதிக்கப்பட்டிருந்த தங்க கவசங்கள் புதுப்பிக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. தங்கமுலாம் பூசப்பட்டு மீண்டும் அணிவிக்கும் போது, துவார பாலகர் சிலைகளின் தங்க கவசத்தில் இருந்து நான்கு கிலோ தங்கம் மாயமானது தெரியவந்தது. மேலும் கருவறை கதவுகளில் இருந்தும் தங்கம் திருடப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து கோவிலை நிர்வகிக்கும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு அளித்த புகாரைத் தொடர்ந்து, போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து வழக்கு தொடர்பாக விசாரணை நடத்திய கேரள உயர்நீதிமன்றம் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்தது. இதைத்தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. இந்த வழக்கில் தேவசம் போர்டு முன்னாள் தலைவர், நிர்வாக அதிகாரி உட்பட ஒன்பது பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதில் முன்னாள் உறுப்பினர் கே.பி.தாஸ் சதி செயலில் ஈடுப்பட்டுள்ளார் என்று உயர்நீதிமன்றம் உத்தரவின் போது பதிவிட்டிருந்தது.

இந்த நிலையில் மேற்கண்ட வழக்கு விசாரணையின் போது கேரளா உயர்நீதிமன்றம் தெரிவித்த சில கருத்துக்களை நீக்கம் செய்ய வேண்டும் என்று முன்னாள் தேவஸ்வம் போர்டு வாரிய உறுப்பினர் கே.பி.சங்கர் தாஸ் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் திபங்கர் தத்தா மற்றும் சதீஷ் சந்திர சர்மா ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்ற கருத்துக்களை எதனையும் நாங்கள் நீக்கம் செய்ய முடியாது. எனவே மனுவை தள்ளுபடி செய்கிறோம். முன்ஜாமீன் கோரினால் அதனை வேண்டுமானால் பரிசீலனை செய்ய அனுமதி வழங்குகிறோம். குறிப்பாக திருட்டு தொடர்பான விவகாரத்தில் நீங்கள் கடவுளை கூட விட்டு வைக்கவில்லையா?. இது மிகவும் வேதனையாக உள்ளது. குறைந்தபட்சம் கோயிலையும், தெய்வத்தையுமாவது விட்டு வையுங்கள் என்று கடும் அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

Tags : God ,Ayyappan ,Supreme Court ,New Delhi ,Ayyappan temple ,Sabarimala, Kerala ,Dwarapalakar ,
× RELATED 1980களில் கிரிக்கெட் வீரருடனான உறவின்...