×

இடைநிலை ஆசிரியர்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தை: அறிவிப்பு

சென்னை: சமவேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் சென்னையில் கடந்த 6 நாட்களாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், அரையாண்டுத் தேர்வு விடுமுறை முடிந்து நேற்று பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையிலும், பள்ளிகளை புறக்கணித்து இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவுறுத்தினார். அதன் பேரில் பள்ளிக் கல்வி இயக்குநர் கண்ணப்பன், தொடக்க கல்வி இயக்குநர் நரேஷ் தலைமையில் கல்வி அதிகாரிகள், நுங்கம்பாக்கம் கல்லூரிச் சாலையில் உள்ள பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, ஆசிரியர்கள் வைத்த கோரிக்கையை கவனமாக கேட்டறிந்த இயக்குநர்கள், இதுகுறித்து உடனடியாக அரசின் பார்வைக்கு எடுத்து செல்வதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து பதவி மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ராபர்ட் கூறியதாவது: இயக்குநர்களுடன் நடந்த பேச்சுவார்த்தையில் எங்களின் கோரிக்கைகள் மற்றும் கருத்துகளை ஆதாரத்துடன் எடுத்துரைத்துள்ளோம். ஆசிரியர்களின் ஊதிய நிலை, பதவி உயர்வு மற்றும் தேர்வு முறை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களையும் தெளிவாக எடுத்துரைத்தோம். இதற்கு ஓரிரு நாட்களில் ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என்று இயக்குநர்கள் உறுதியளித்தனர்.

மேலும், பள்ளிக் கல்வித்துறை செயலாளருடன் மீண்டும் விரிவான பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு எட்டப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுவரை ஆசிரியர்களின் போராட்டம் நீடிக்கும். கல்விக்காக அரசு செலவிடும் தொகை ஒரு முதலீடு. தமிழகத்தை கல்வியில் முதன்மை மாநிலமாக மாற்றியதில் ஆசிரியர்களின் பங்களிப்பு முக்கியமானது. கல்வியில் பின்தங்கியுள்ள மாநிலங்களிலும் கூட ஆசிரியர்களின் ஊதியம் உரிய முறையில் வழங்கப்படுகிறது. அதனால் நிதித்துறை அதை கருத்தில் கொண்டு ஆசிரியர்களுக்கு சாதகமான நல்ல முடிவை அறிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags : Chennai ,
× RELATED ஊட்டி அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை...