புதுச்சேரி, ஜன. 5: புதுச்சேரி சாந்தி நகரை சேர்ந்த ஆண் நபரை, மர்ம நபர் ஒருவர் டெலிகிராம் மூலம் தொடர்புகொண்டு வீட்டிலிருந்தபடி அதிக பணம் சம்பாதிக்கலாம் எனக்கூறியுள்ளார். இதனை நம்பி மேற்கூறிய நபர் பல்வேறு தவணைகளில் ரூ.9.10 லட்சம் முதலீடு செய்து, அவருக்கு கொடுக்கப்பட்ட பணிகளை முடித்துள்ளார். பின்னர், அதில் சம்பாதித்த பணத்தை அவரால் எடுக்க முடியவில்லை. அதன்பிறகே அவர் மோசடி கும்பலிடம் ஏமாந்தததை உணர்ந்தார். இதேபோல், சண்முகபுரம் பகுதியை சேர்ந்த ஆண் நபர் ஒருவர் ரூ.32 ஆயிரத்தை மோசடி கும்பலிடம்
ஏமாந்துள்ளார்.
மேலும், புதுச்சேரி பனித்திட்டு பகுதியை சேர்ந்த ஆண் நபரை, மர்ம நபர் வாட்ஸ் அப்பில் தொடர்புகொண்டு வெளிநாட்டில் வேலை வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளார். இதனை நம்பி, மேற்கூறிய நபர் விசா, விண்ணப்பித்துக்கான கட்டணம் என ரூ.6 லட்சத்தை அனுப்பி மோசடி கும்பலிடம் ஏமாந்துள்ளார். அரியாங்குப்பம் சேர்ந்த ஆண் நபர் ஒருவருக்கு பங்குசந்தையில் முதலீடு செய்து சம்பாதிக்கலாம் என மர்ம நபர் கூறியதை நம்பி மோசடி கும்பலிடம் ரூ.1.55 லட்சத்தை இழந்துள்ளனர்.
இதேபோல், வில்லியனூரை சேர்ந்த ஆண் நபர் ரூ.1.01 லட்சமும், வைத்திக்குப்பத்தை சேர்ந்த ஆண் நபர் ரூ.13 ஆயிரத்தை மோசடி கும்பலிடம் ஏமாந்துள்ளனர். மேலும், லாஸ்பேட்டை சேர்ந்த பெண் ஒருவர் ரூ.86 ஆயிரமும், முத்தியால்பேட்டை சேர்ந்த ஆண் நபர் ரூ.15 ஆயிரமும், புதுவை சேர்ந்த ஆண் நபர் ரூ.28 ஆயிரம் என மோசடி கும்பலிடம் பணத்தை இழந்துள்ளனர்.
மேற்கூறிய 9 பேர் ரூ.19.40 லட்சத்தை மோசடி கும்பலிடம் இழந்துள்ளனர். இதில் பாதிக்கப்பட்டவர்கள் தனித்தனியாக புதுச்சேரி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
