×

மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் உள்பட இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை: ஒன்றிய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது: நாகப்பட்டினம் மாவட்டம், கோடியக்கரை மீனவ கிராமத்தில் இருந்து 9 மீனவர்கள் இரண்டு மீன்பிடி படகுகளில் மீன்பிடிக்க சென்றிருந்த நிலையில், நேற்று முன்தினம் (2ம் தேதி) இரவு இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ளதை கவலையோடு தெரிவித்துக் கொள்கிறேன். புத்தாண்டின் தொடக்கத்திலேயே நடைபெற்றுள்ள இந்த சம்பவம், தமிழ்நாட்டு மீனவர்கள் தொடர்ந்து எதிர்கொள்ளும் அவல நிலையை மீண்டும் எடுத்துக்காட்டும் வகையில் அமைந்துள்ளது.

தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை கடற்படையினர் இதுபோன்று தொடர்ந்து கைது செய்வதும், அவர்களது மீன்பிடி படகுகளை பறிமுதல் செய்வதும் தடையின்றி நடைபெறுவது மிகுந்த கவலைக்குரிய விஷயமாகும். தற்போதைய நிலவரப்படி, தமிழ்நாட்டை சேர்ந்த 73 மீனவர்களும், 251 மீன்பிடி படகுகளும் இலங்கை காவலில் உள்ளனர். இந்த தொடர்ச்சியான கைது சம்பவங்கள், தமிழ்நாட்டின் கடலோர மீனவ சமுதாய மக்களிடையே பெருத்த இன்னல்களையும், பதற்றத்தையும், மன உளைச்சலையும் ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற கைது நடவடிக்கைகள் இனிமேல் நடைபெறுவதை தடுக்கவும், இலங்கை காவலில் உள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடி படகுகளையும் உடனடியாக விடுவிப்பதை உறுதி செய்திடவும், ஒன்றிய அரசு உரிய தூதரக வழிமுறைகள் மூலம் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Tags : Tamil Nadu ,Mayiladuthurai district ,Chief Minister ,Union Minister ,Chennai ,M.K. Stalin ,Union Minister of External Affairs ,Jaishankar ,Kodiyakarai ,Nagapattinam district ,
× RELATED 175வது ஆண்டைத் தொடும் புத்துணர்வு பானம்...