×

ஜி ராம் ஜி சட்டத்தை எதிர்த்து ஜன.10ல் போராட்டங்கள் தொடங்கும்: காங்கிரஸ் அறிவிப்பு

புதுடெல்லி: 100 நாள் வேலை திட்டம் எனப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்திற்கு பதிலாக விபி ஜி ராம் ஜி சட்டத்தை ஒன்றிய பாஜ அரசு கொண்டு வந்துள்ளது. நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட இந்த சட்டத்திற்கு எதிராக காங்கிரஸ் நாடு தழுவிய போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தது. இதுதொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர்கள் கே.சி.வேணுகோபால், ஜெய்ராம் ரமேஷ் ஆகியோர் நேற்று கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தைக் காக்கும் போராட்டம் வரும் 10ம் தேதி தொடங்கி பிப்ரவரி 25ம் தேதி வரை தொடர்ந்து நடத்த முடிவு செய்துள்ளோம். இது வெறும் காங்கிரஸ் கட்சியின் போராட்டம் மட்டுமல்ல. எதிர்க்கட்சிகள் ஆளும் அனைத்து மாநிலங்களுடனும் விரிவான விவாதங்களை நடத்தி, ஒன்றாகப் போராடுவோம். ஜனவரி 10ம் தேதி மாவட்ட அளவில் செய்தியாளர் சந்திப்புகள் நடைபெறும். அதைத் தொடர்ந்து ஜனவரி 11ம் தேதி மாவட்டத் தலைமையகங்களில் ஒருநாள் உண்ணாவிரதம் மற்றும் அடையாளப் போராட்டங்கள் நடைபெறும்.

ஜனவரி 12 முதல் 29 வரை அனைத்து கிராம பஞ்சாயத்துகளிலும் பஞ்சாயத்து அளவிலான மக்கள் சந்திப்புக் கூட்டங்களும், மக்கள் தொடர்புத் திட்டங்களும் ஏற்பாடு செய்யப்படும். ஜனவரி 30-ஆம் தேதி வேலை செய்வதற்கான உரிமையை வலியுறுத்தி வார்டு அளவில் அமைதியான தர்ணா போராட்டங்கள் நடைபெறும். பிப்ரவரி 7 முதல் 15 வரை மாநில அளவில் சட்டப்பேரவைகளை முற்றுகையிடும் போராட்டங்கள் நடத்தப்படும். பிப்ரவரி 16 முதல் 25ம் தேதிக்குள் 4 பெரிய பேரணிகள் நடத்தப்படும். புதிய சட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு இனி ஒரு உரிமையாக இருக்காது. இந்த சட்டம் கூட்டாட்சி அமைப்புக்கு எதிரானது என்பதால் எந்த எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலமும் இச்சட்டத்தை அமல்படுத்த தயாராக இல்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.

* ராஞ்சியில் நாளை மாபெரும் பேரணி
விபி-ஜி ராம் ஜி சட்டத்தை எதிர்த்து ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நாளை மாபெரும் பேரணியை நடத்த இருப்பதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. இது குறித்து அம்மாநில காங்கிரஸ் தலைவர் கேசவ் மகதோ கமலேஷ் கூறுகையில், ‘‘இப்பேரணியில் கட்சித் தொண்டர்கள் மொராபாடியில் உள்ள பாபு வாடிகாவில் கூடி லோக் பவனை நோக்கி பேரணியாகச் செல்வார்கள். விபி-ஜி ராம் ஜி-க்கு எதிரான நாடு தழுவிய போராட்டத்தின் ஒரு பகுதியாக இந்தப் பேரணியை நாங்கள் ஏற்பாடு செய்கிறோம்’’ என்றார்.

Tags : Congress ,New Delhi ,BJP government ,Parliament… ,
× RELATED திருடிய பொருள் ரூ.5000க்கு குறைவாக...