திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் மார்கழி மாத பவுர்ணமியை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் விடியவிடிய கிரிவலம் சென்று வழிபட்டனர். விடுமுறை தினம் என்பதால் அண்ணாமலையார் கோயிலில் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் சுமார் 5 மணி நேரத்துக்கும் மேலாக வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.
திருவண்ணாமலையில் மாதந்தோறும் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் சிரிவலம் வலம் வந்து அண்ணாமலையாரை வழிபடுகின்றனர். அதன்படி மார்கழி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் நேற்று மாலை 6.45 மணிக்கு தொடங்கி, இன்று மாலை 4.43 மணிக்கு நிறைவடைகிறது. அதையொட்டி, நேற்று மாலையில் இருந்தே பக்தர்கள் கிரிவலம் செல்ல தொடங்கினர். இரவு 7 மணிக்கு பிறகு கிரிவல பக்தர்களின் எண்ணிக்கை லட்சக்கணக்காக அதிகரித்தது. கிரிவலப்பாதை அமைந்துள்ள 14 கிமீ தூரமும் பக்தர்கள் வெள்ளத்தால் நிறைந்திருந்தது. கிரிவலப்பாதையில் அமைந்துள்ள அஷ்டலிங்க சன்னதிகள், அடி அண்ணாமலை திருக்கோயில், இடுக்குப் பிள்ளையார் கோயில்களை வழிபட்டபடி பக்தர்கள் கிரிவலம் சென்றனர். கோயிலிலும் கூட்டம் அலைமோதியது.
பவுர்ணமி இன்று மாலை வர நீடிப்பதால் 2வது நாளாக இன்றும் பக்தர்கள் கிரிவலம் சென்றனர். அதிகாலை 4மணிக்கு நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடந்தது. இதைதொடர்ந்து பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். இன்றும், நாளையும் வார இறுதி அரசு விடுமுறை என்பதாலும், புத்தாண்டு முடிந்த நிலையில் பவுர்ணமி அமைந்த கிரிவலம் என்பதாலும் இன்றும் பக்தர்கள் வருகை அதிகரித்திருந்தது. கோயில் வெளிப்பிரகாரம் வட ஒத்தைவாடை தெரு, தென் ஒத்தைவாடை தெரு வரை நீண்ட தூரத்துக்கு தரிசன வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இவர்கள் 5மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு, தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, தெலங்கானா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. மேலும், வேலூர் மற்றும் விழுப்புரம் வழித்தடங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. கிரிவலம் முடிந்த பக்தர்கள் சிறப்பு பஸ்கள் மற்றும் ரயில்களில் தங்களது ஊர்களுக்கு சென்றனர்.
