×

தவெக உடன் காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை என்பது வதந்தி; திமுக-காங்கிரஸ் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது: காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் பரபரப்பு பேட்டி

சென்னை: தவெக உடன் காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை என்பது வதந்தி என்றும், திமுக-காங்கிரஸ் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது என்றும் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் கூறினார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் இன்னும் ஒரு சில மாதங்களில் நடைபெற உள்ளது. இதனால், தேர்தல் களம் தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் சூடுபிடிக்க தொடங்கி விட்டது. எனவே தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் களம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், தமிழக காங்கிரஸ் கட்சியும் தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளது.

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி, இந்த முறை தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த முதல் ஆளாக தமிழக மேலிட காங்கிரஸ் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தலைமையில் ஐவர் குழுவை நியமித்தது. இந்த குழு முதல்வரை சந்தித்து தொகுதி பங்கீடு தொடர்பாக முதல் கட்ட பேச்சுவார்த்தையை நடத்தியது. திமுகவில் குழு அமைத்ததும் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், காங்கிரஸ் கட்சியில் நிர்வாகிகள் சிலர் கூட்டணி தொடர்பாக வதந்திகளை பரப்புவதும், ஆட்சியில் பங்கு, அதிக சீட் என்று குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தது. கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிப்பவர்கள் குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை டெல்லி மேலிடத்தில் புகார் செய்துள்ளார். தேர்தல் நெருங்கும் இந்த சூழ்நிலையில், தேர்தல் பணிகளை மேலும் தீவிரப்படுத்தும் வகையில் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக இன்று சென்னை வந்துள்ளார்.

இன்று காலை சத்தியமூர்த்திபவனுக்கு வருகை தந்த அவருக்கு தமிழக காங்கிரஸ் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதை தொடர்ந்து, சட்டமன்ற தேர்தல் தொடர்பாக மாநில நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார். இதையடுத்து, சென்னை மாநகராட்சி கவுன்சிலர்கள், வார் ரூம் நிர்வாகிகள், சமூக ஊடகத்துறை நிர்வாகிகள் என பல்வேறு அணி நிர்வாகிகளுடன் கலந்தாலோசனை நடத்தினார். அப்போது பல நிர்வாகிகள், திமுக உடனான கூட்டணிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்படுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் கூட்டணியில் எத்தனை சீட் கேட்டு பெறலாம் என்றும் தங்கள் கருத்துகளை கிரிஷ் சோடங்கரிடம் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. முக்கிய நிர்வாகிகளின் விருப்பத்தை கேட்ட அவர் மேலிடத்தில் தகவல் தெரிவித்து முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவோம் என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது.

முன்னதாக, சத்தியமூர்த்திபவனில் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் நிருபர்களிடம் கூறியதாவது:
தவெகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை என்பது வதந்தி. தவெக உடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறுவதாக நாங்கள் யாரும் சொல்லவில்லை. தவெக உடன் பேச்சுவார்த்தை நடந்ததாக தவெகவில் யார் சொன்னது?. திமுகவுடன் மட்டுமே கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். திமுக-காங்கிரஸ் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது. தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை முன்கூட்டியே தொடங்கப்பட்டு சுமூகமாக நடைபெற்று வருகிறது. திமுகவிடம் காங்கிரஸ் 38 தொகுதிகளை கேட்கிறது என்று கூறியது யார்?. திமுக உடன் கூட்டணி இல்லை என்று நாங்கள் சொன்னோமா?.

தமிழ்நாட்டில் காங்கிரஸ் எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என்பதை விரைவில் அறிவிப்போம். திமுக உடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை விரைவில் இறுதி செய்வோம். திமுக உடன் கூட்டணிக்கு செல்ல முடிவெடுத்து பேச்சுவார்த்தை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளது. திமுக-காங்கிரஸ் கூட்டணி என்பது நம்பகமான கூட்டணி. வதந்தி பரப்பியவர்களிடமே விளக்கம் கேட்டு கொள்ளுங்கள். பிரவீன் சக்கரவர்த்தி- விஜய் சந்திப்பை நாங்கள் பொருட்படுத்தவில்லை. தமிழ்நாட்டில் யாரோ ஒருவர் யாரையோ சந்தித்தால் நாங்கள் ஏன் பொருட்படுத்த வேண்டும். காங்கிரஸ் எம்பி ஜோதிமணி எழுப்பிய புகார் குறித்து விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட 5000க்கும் மேற்பட்ட விருப்ப மனுக்களை வாங்கியுள்ளோம். ஆட்சி அதிகாரத்தை எந்த கட்சி தான் வேண்டாம் என்று சொல்வார்கள். எந்த அரசியல் கட்சியாக இருந்தாலும் ஆட்சி அதிகாரத்தை விரும்பும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Congress ,Daveka ,Dimuk ,chief officer ,Krish Sodankar ,Chennai ,Dimukh ,Tamil Nadu ,
× RELATED 2021 திமுக தேர்தல் அறிக்கையில் 80%...