×

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் சிறுவர் விளையாட்டு பூங்கா, ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்படுமா? சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பு

மதுராந்தகம், ஜன.3: வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் சுற்றுலா பயணிகள் பயன்பெறும் விதமாக சிறுவர் விளையாட்டு பூங்கா, ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்படுமா? என்று சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பு தெரிவிக்கின்றனர். செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த வேடந்தாங்கல் கிராமத்தில் புகழ்பெற்ற பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. இந்த சரணாலயத்தில் ஆண்டுதோறும் நவம்பர் மாதத்தில் இனப்பெருக்கத்திற்காக ஆஸ்திரேலியா, சைபீரியா, கனடா, இலங்கை, பர்மா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து நத்தை கொத்தி நாரை, கூழைக்கடா, வர்ணனாரை, நீர்காகம், பாம்பு தாரா, வெள்ளை அரிவாள் மூக்கன், ஊசி வாத்து, நாமகோழி உள்ளிட்ட 21 வகையான பறவைகள் வந்து ஏரியில் உள்ள மரங்களில் தங்கி இனப்பெருக்கம் செய்துவிட்டு குஞ்சு பறவைகளுடன் தங்களது சொந்த நாடுகளுக்கு செல்வது வழக்கம்.

கடந்த நவம்பர் மாதம் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் பகுதியில் கனமழை பெய்து சரணாலயத்தில் உள்ள ஏரி நிரம்பியது. இதனால் அங்கு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நத்தை கொத்தி நாரைகள், நூற்றுக்கும் மேற்பட்ட பாம்பு தாரா, 500க்கும் மேற்பட்ட கூழைக்கடா, 200க்கும் மேற்பட்ட நீர் காகம், 500க்கும் மேற்பட்ட வெள்ளை அரிவாள் மூக்கன் உள்ளிட்ட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகள் ஏரியின் நடுவே அமைந்துள்ள மரங்களில் கூடு கட்டி தஞ்சம் அடைந்துள்ளது. இதனால் பறவைகள் சீசன் கலைக்கட்டியுள்ளது.

தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதிலும் இருந்தும் உலக நாடுகளில் இருந்தும் ஏராளமான வெளிநாட்டினரும் பறவைகளைக் காண தினமும் வந்து செல்கின்றனர். இந்நிலையில் சரணாலயத்திற்கு வரும் சிறுவர்கள் பறவைகளை கண்டு ரசித்ததும் சரணாலயம் ஏரியின் நடைபாதையிலேயே ஓடிப் பிடித்து விளையாடுகின்றனர். இதனால் பல ஊர்களில் இருந்து பல ஆயிரங்களை செலவு செய்து இந்த சரணாலயத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளின் பொழுதுபோக்கு விரைவாக முடிந்து விடுகிறது. எனவே சரணாலயம் அருகில் சிறுவர்கள் விளையாடி மகிழும் வகையில் விளையாட்டு பூங்கா ஏற்படுத்தித் தர வேண்டும் என்றும், சரணாலயத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்காக வேடந்தாங்கல் கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் புதிதாக அமைக்க வேண்டும் என்றனர்.

Tags : Vedanthangal Bird Sanctuary ,Madhurantakam ,Vedanthangal ,Chengalpattu ,
× RELATED ஏ.சி.சர்வீஸ் கடையில் பயங்கர தீ விபத்து