×

கரூர் கூட்ட நெரிசல் வழக்கை விசாரித்ததில் தவறு நடக்கவில்லை: சென்னை உயர் நீதிமன்ற பதிவாளர் உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல்

புதுடெல்லி: கரூர் விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் அமைத்த சிறப்பு விசாரணை குழுவுக்கு எதிராக தவெக தொடர்ந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதி ஜே.கே.மகேஸ்வரி தலைமையிலான அமர்வு விசாரணை நடத்தியது. இந்த வழக்கில் கடந்த மாதம் 13ம் தேதி பிறப்பித்த உத்தரவில்,\\”கரூர் சம்பவம் தொடர்பாக ரிட் மனுவை விசாரித்ததில் உயர்நீதிமன்ற விசாரணை நடைமுறையில் தவறுகள் உள்ளது என கூறியதோடு, இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தெரிவித்திருந்தது.

மேற்கண்ட விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்ற பதிவாளர் தாக்கல் செய்துள்ள 142 பக்கங்கள் கொண்ட பிரமாணப் பத்திரத்தில்,\\”வழக்கமான நடைமுறைகள் படி ஒரு வழக்கு பதிவானால் அதை பட்டியலிடுவதற்கு முன்பாக சரிபார்க்கும் வேலைகள் நடைபெறும். அனைத்தும் சரியாக இருந்தால் தான் வழக்கு விசாரணைக்காக ஒதுக்கீடு செய்யப்படும். ஏதேனும் பிழை இருந்தால் மனுதாரர்களுக்கு மீண்டும் அனுப்பி வைக்கப்படும். கடந்த ஆண்டு தசரா விடுமுறை சிறப்பு அமர்வுகளை பொருத்தவரை நீதிபதிகள் வேல்முருகன் மற்றும் அருள் முருகன் ஆகியோர் இரு நீதிபதி அமர்வுகளாகவும், நீதிபதி பாலாஜி ரிட் மனுக்களை விசாரிக்க கூடிய தனி நீதிபதி அமர்வாகவும், நீதிபதி என்.செந்தில்குமார் கிரிமினல் வழக்குகளை விசாரிக்கும் தனி அமர்வாகவும் செயல்பட்டார்கள்.

இதேப்போன்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அமர்வில் நீதிபதிகள் தண்டபாணி மற்றும் ஜோதிராமன் இரு நீதிபதிகள் அமர்வாகவும், இரு நீதிபதி அமர்வு முடிந்த பிறகு தண்டபாணி ரிட் மனுக்களை விசாரிக்கும் நீதிபதியாகவும், ஜோதிராமன் கிரிமினல் வழக்குகளை விசாரிக்கும் நீதிபதியாகவும் செயல்பட்டுள்ளனர். குறிப்பிட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் வழக்கை பொருத்தவரை பொதுநல வழக்காக அல்லாமல் கிரிமினல் மனுவாக இருந்தது. அதனால் தான் வழக்கை தனி நீதிபதி அமர்வு முன்பு பட்டியலிடப்பட்டு விசாரிக்கப்பட்டது.

இதில் குறிப்பாக கரூர் விவகாரத்தை பொதுநல வழக்காக கருதாமல் இருந்தமைக்கு காரணம் என்னவென்றால், வழக்கில் எதிர் மனுதாரர்களாக காவல்துறையை சேர்ந்தவர்கள் இருந்தனர். மேலும் பொதுநல வழக்காக மாற்ற எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படாத காரணத்தினால் அதனை கிரிமினல் வழக்காகவே கருதி பட்டியலிட்டு விசாரித்து உத்தரவிடப்பட்டது. அதேப்போன்று ஹெச்.பி.தினேஷ் என்பவர் கரூர் சம்பவத்தை சுட்டிக்காட்டி அரசியல் கட்சிகள் நடத்தும் கூட்டங்களுக்கு பொதுவான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது.

இதைத்தொடர்ந்து தான் இந்த மனுவை கிரிமினல் வழக்காக நீதிமன்றத்தின் முன்பு பட்டியலிடுமாறு விடுமுறை கால சிறப்பு அமர்வு நீதிபதியான செந்தில்குமார் வாய்மொழியாக உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் தான் விசாரணை நடத்தப்பட்டது. எனவே கரூர் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அமர்வில் நிலுவையில் இருந்தபோது, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்காக பட்டியலிடப்பட்டதில் எந்த தவறோ அல்லது முறைகேடோ கிடையாது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Karur ,Madras High Court Registrar ,Supreme Court ,New Delhi ,Justice ,J.K. Maheshwari ,Thaveka ,Madras High Court ,
× RELATED டெல்லியில் நாளை புத்தர் கண்காட்சியை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி!