- உச்ச நீதிமன்றம்
- BJP MLA
- உன்னாவோ
- புது தில்லி
- தில்லி உயர் நீதிமன்றம்
- பாஜக
- சட்டமன்ற உறுப்பினர்
- குல்தீப் செங்கர்
புதுடெல்லி: உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில் பாஜ முன்னாள் எம்எல்ஏ குல்தீப் செங்காருக்கு டெல்லி உயர் நீதிமன்றம் வழங்கிய நிபந்தனை ஜாமீனை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்தது. கடந்த 2017ம் ஆண்டு வேலை வாங்கி தருவதாக கூறி அழைத்து செல்லப்பட்ட சிறுமி ஒருவர் உத்தரப்பிரதேச மாநிலத்தின் உன்னாவ் சட்டமன்ற தொகுதியின் உறுப்பினர் குல்தீப் சிங் செங்காரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இதையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தும் காவல்துறைய நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் பெற்றோர் நீதிமன்றத்தை நாடிய போது இந்த விவகாரம் தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுதொடர்பான வழக்கின் விசாரணை உத்தரபிரதேசம் மாநிலத்திலிருந்து டெல்லி நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட நிலையில், கடந்த 2019ம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் குல்தீப் சிங் செங்கருக்கு ஆயுள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதுபோன்ற நிலையில் குல்தீப் சிங் செங்கார் ஜாமீன் கோரி தாக்கல் செய்திருந்த மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், கடந்த சில தினங்களுக்கு முன்னதாக நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டிருந்தது. இந்த நடவடிக்கை மீண்டும் சர்ச்சையை கிளப்பியது. குறிப்பாக காங்கிரஸ் உட்பட எதிர்கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்து வந்தனர்.
இதையடுத்து மேற்கண்ட உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக சிபிஐ தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவானது உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சூர்யகாந்த் கொண்ட மூன்று நீதிபதிகள் கொண்ட சிறப்பு அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தபோது சிபிஐ தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் துஷார் மேத்தா,‘‘சட்டத்தில் உள்ள பல்வேறு நுணுக்கங்களை ஆராயாமல் டெல்லி உயர்நீதிமன்றம் குல்தீப் சிங் செங்காருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உள்ளது. எனவே உச்ச நீதிமன்றம் அதனை கருத்தில் கொள்ளக் கூடாது என்று தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து தலைமை நீதிபதி சூர்யகாந்த் பிறப்பித்த உத்தரவில்,‘‘இந்த விவகாரத்தில் வழக்கின் தன்மை கருதி டெல்லி உயர்நீதிமன்றம் குல்தீப் சிங் செங்காருக்கு வழங்கிய நிபந்தனை ஜாமீனை நிறுத்தி வைப்பதாகவும், மேலும், ஒருவரின் ஜாமினை ரத்து செய்யவோ அல்லது நிறுத்தி வைப்பதற்கு முன்பு பாதிக்கப்பட்ட நபரின் கருத்துக்களை கேட்பது அவசியம். ஆனால் இந்த வழக்கில் நிபந்தனை ஜாமீன் பெற்றுள்ள குல்தீப் சிங் செங்கார் வேறு ஒரு வழக்கில் தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். எனவே அதனை அடிப்படையாகக் கொண்டு தற்போது வழங்கப்பட்டுள்ள நிபந்தனை ஜாமீன் நிறுத்தி வைக்கப்படுகிறது. அதேநேரத்தில் சிபிஐ தாக்கல் செய்துள்ள மேலுமுறையீட்டு மனுவுக்கு குல்தீப் சிங் செங்கார் நான்கு வாரங்களில் பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.
