புதுடெல்லி: உத்தரகாண்டில் திரிபுரா மாணவர் கொல்லப்பட்டது கொடூரமான வெறுப்பு குற்றம் என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளனர். உத்தரகாண்டில் தங்கி படித்து வந்த திரிபுராவை சேர்ந்த ஏஞ்சல் சக்மா(24) என்ற மாணவர் கடந்த 6ம் தேதி வெளியே சென்றிருந்தார். அப்போது ஒரு கும்பல் அவரிடம் இனவெறியை தூண்டும் வகையில் கிண்டல் செய்தது. இதனை தட்டிக்கேட்ட சக்மா கும்பலால் பயங்கரமாக தாக்கப்பட்டார். மருத்துவமனையின் தீவி சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி சனியன்று உயிரிழந்தார்.
மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல்காந்தி தனது எக்ஸ் தள பதிவில்,‘‘வெறுப்பு ஒரே இரவில் தோன்றுவது இல்லை. டேராடூனில் ஏஞ்சல் சக்மா மற்றும் அவரது சகோதரர் மைக்கேலுக்கு நடந்தது ஒரு கொடூரமான வெறுப்புக் குற்றமாகும். வெறுப்பு ஒரே இரவில் தோன்றுவதில்லை. பல ஆண்டுகளாக நச்சுத்தன்மை வாய்ந்த உள்ளடக்கங்கள் மற்றும் பொறுப்பற்ற கதைகள் மூலமாக அது தினமும் ஊட்டப்படுகின்றது. குறிப்பாக ஆளும் பாஜவின் வெறுப்பை தூண்டும் தலைமை இதனை சாதாரணமாக்கி வருகின்றது. இந்தியா பயம் மற்றும் துஷ்பிரயோகத்தால் அல்ல. மரியாதை மற்றும் ஒற்றமையால் கட்டப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.
மாநிலங்களவை எம்பியான கபில் சிபல், ‘‘வெறுப்புக் குற்றங்களுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவை வலியுறுத்துகிறேன். திரிபுரா மாணவர் தாக்கப்பட்ட சம்பவம் ஒரு வெறுப்புக் குற்றமாகும். மதவெறி மற்றும் தங்களது செயலற்ற தன்மையால் உடந்தையாக இருக்கும் அரசு தலைவர்களின் மவுனம் ஆகியவற்றின் அதிர்ச்சியூட்டும் வெளிப்பாடு” என்றார்.
