×

போதைப்பொருள் வழக்கில் சிக்கியதால் தமிழ் நடிகை ரகுல் பிரீத் சிங்கின் தம்பிக்கு வலை: தனிப்படை போலீஸ் தீவிர தேடுதல் வேட்டை

ஐதராபாத்: போதைப்பொருள் விற்பனை வழக்கில் சிக்கிய நடிகை ரகுல் பிரீத் சிங்கின் சகோதரரை, போலீசார் தேடி வருகின்றனர். கடந்த 2024ம் ஆண்டு ஜூலை மாதம் போதைப்பொருள் பயன்படுத்திய புகாரில் சிக்கி, மருத்துவப் பரிசோதனையில் கொக்கைன் உட்கொண்டது உறுதி செய்யப்பட்டவர் தெலுங்கு நடிகர் அமன் பிரீத் சிங். இவர் பிரபல நடிகை ரகுல் பிரீத் சிங்கின் சகோதரர் ஆவார். இந்நிலையில் தெலங்கானா மாநிலம் ஐதராபாத் மாசப் டேங்க் பகுதியில் உள்ள சாச்சா நேரு பூங்கா அருகே கடந்த 19ம் தேதி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது நிதின் சிங்கானியா, ஷ்ரானிக் சிங்வி ஆகிய இரு தொழிலதிபர்களைக் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 43.7 கிராம் கொக்கைன் மற்றும் 11.5 கிராம் போதைப்பொருட்களைப் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில், அமன் பிரீத் சிங் இவர்களிடம் நிரந்தர வாடிக்கையாளராக இருந்து வருவது தெரியவந்தது. குறிப்பாக அவர் குறைந்தது 5 முறையாவது இவர்களிடம் போதைப்பொருள் வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும் கடந்த 24ம் தேதி கைதான இரண்டு ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்தவர்களும் இதனை உறுதிப்படுத்தியுள்ளனர். அமன் பிரீத் சிங் பல மாதங்களாக ஆன்லைன் மூலம் பணப்பரிவர்த்தனை செய்ததற்கான டிஜிட்டல் ஆதாரங்களையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர். இது தொடர்பாக மாசப் டேங்க் காவல் நிலையத்தில் போதைப் பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது தலைமறைவாக உள்ள அமன் பிரீத் சிங்கைக் கைது செய்ய ஐதராபாத் போலீஸ் மற்றும் ஈகிள் சிறப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். ‘அவர் பிடிபட்ட பிறகு மறுவாழ்வு மையத்திற்கு அனுப்புவதா அல்லது ஆலோசனை மையத்திற்கு அனுப்புவதா என்பது முடிவு செய்யப்படும்’ எனப் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Rakul Preet Singh ,Hyderabad ,
× RELATED 41 பேர் பலியான சம்பவத்தில் விஜய்...