×

வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் பிராட்வே துணைமின் நிலையம் திறப்பு

சென்னை:வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.18.24 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள பிராட்வே துணைமின் நிலையத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், தமிழ்நாடு மின்சார வாரியத்தில் ரூ.1034.24 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 16 திட்டப்பணிகள் மேற்கொள்ள வழிவகை செய்யும் பொருட்டு, தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் 1000.39 கோடி மற்றும் சென்னை வளர்ச்சி குழுமம் சார்பில் ரூ.33.85 கோடி நிதி பங்கீடு உறுதி செய்யப்பட்டது.

தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தின் சார்பில், துறைமுகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பிராட்வே, டேவிட்சன் சாலையில் அமைச்சர் பி.கே. சேகர்பாபு கடந்த ஏப்.19ம் தேதி துணைமின் நிலைய கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டி, கட்டுமான பணிகளை துவங்கி வைத்தார். இந்த நிலையில் துணைமின் நிலைய கட்டுமான பணிகள் தொய்வின்றி நடைபெற்று முடிந்து புதிய துணைமின் நிலையம், மின்னூட்டம் பெற்று 5 புதிய 11 கி.வோ மின் பாதைகள் வாயிலாக 2X8 எம்.வி.ஏ திறனுடைய மின்மாற்றிகள் மூலமாக மின்சாரம் பகிர்ந்தளிக்கப்பட்டு வடசென்னை பகுதியில் தடையற்ற மற்றும் தரமான மின்சாரம் வழங்கப்படுகிறது.

குறைந்த மின் அழுத்த குறைபாட்டினை நிவர்த்தி செய்து, மின்னழுத்த ஏற்ற இறக்கமின்றி சீரான மின் விநியோகம் செய்வதை உறுதி செய்யும் பொருட்டு பிராட்வே துணைமின் நிலையத்தை துணை முதல்வர் உதயநிதிஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். இந்த துணை மின் நிலையத்தின் மூலமாக, ஏற்கனவே உள்ள கிழக்கு ஜார்ஜ் டவுன், பூக்கடை துணை மின் நிலையங்கள் மற்றும் உயர்நீதிமன்ற 110 கி.வோ துணை மின் நிலையத்திலும் உள்ள 10 எம்.வி.ஏ மின் பளுக்கள் குறைக்கப்பட்டு, இத்துணை மின் நிலையத்தின் வாயிலாக மின் விநியோகம் செய்யப்படும்.

இதன் மூலம் பிராட்வே, மண்ணடி, சவுகார்பேட்டை, கொத்தவால் சாவடி, என்.எஸ்.சி போஸ் ரோடு, முத்தையால் பேட்டை மற்றும் ஏழு கிணறு போன்ற பகுதிகளில் உள்ள வணிக மற்றும் வீடு மின்நுகர்வோர்கள் சுமார் பதினைந்தாயிரத்திற்க்கும் மேற்பட்டோர் சீரான மற்றும் தடையற்ற மின்சாரம் பெற்று பயன் அடைய உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சிவசங்கர், பி.கே.சேகர்பாபு, மேயர் பிரியா, தமிழ்நாடு மின்வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர்கள், துணை மேயர் மகேஷ் குமார், இயக்குநர் (பகிர்மானம்) செல்வக்குமார் மற்றும் அரசு உயர் அதிகாரி்கள் கலந்து கொண்டனர்.

Tags : Broadway ,Substation ,Chennai ,Deputy Chief Minister ,Udhayanidhi Stalin ,Broadway Substation ,Tamil Nadu Electricity Board… ,
× RELATED சென்னை போலீஸ்காரர் விஷம் குடித்து தற்கொலை