×

பொங்கல் அன்று நடக்கவிருந்த சிஏ தேர்வு தேதி மாற்றம்

சென்னை: பொங்கல் பண்டிகை நாளில் இந்தியப் பட்டய கணக்காளர் கழகம் சார்பாக தேர்வுகள் அறிவிக்கப்பட்டது. இது தமிழ்நாட்டு இளைஞர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த இந்த பண்டிகை நாட்களில் தேர்வுகளை நடத்துவதன் மூலமாக மாணவர்களின் உணர்வுகள் புண்படும் என்று கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.

இந்த விவகாரம் தொடர்பாக மதுரை எம்பி சு.வெங்கடேசன் இந்தியப் பட்டய கணக்காளர் கழக தலைவர் சரண் ஜோத் சிங் நந்தாவுக்கு கடிதம் எழுதி இருந்தார். அந்த கடிதத்தில், பொங்கல் பண்டிகை, திருவள்ளுவர் தினம் மற்றும் உழவர் திருநாள் ஆகிய நாட்களான ஜனவரி 15, 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் இந்தியப் பட்டய கணக்காளர் கழகம் இடையீட்டு தேர்வு மற்றும் இறுதித் தேர்வுகளை அறிவித்துள்ளது.

இது தேர்வர்களுக்கு கடுமையான சிரமங்களை உண்டாக்கும் என்று என்னிடம் முறையீடுகள் வந்தன. இதனால் பொங்கல் திருநாள் கொண்டாடப்படும் தேதிகளில் அறிவிக்கப்பட்ட தேர்வுகளை வேறு தேதிக்கு மாற்றி அறிவிக்க வேண்டும் என்று கூறி இருந்தார். இந்த நிலையில் ஜனவரி 15ம் தேதி நடக்கவிருந்த சிஏ இண்டர்மீடியர் தேர்வு, ஜனவரி 19ம் தேதி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 15ம் தேதி மகாராஷ்டிரா மாநகராட்சித் தேர்தல் நடக்கவிருப்பதால், இந்த தேர்வு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வெளியிடப்பட்ட ஹால் டிக்கெட் மூலமாகவே இந்த தேர்வை எழுதலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற அனைத்து தேர்வுகளும் திட்டமிட்டபடி நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மதுரை எம்பி சு.வெங்கடேசன் தனது எக்ஸ் பக்கத்தில்:

பொங்கல் அன்று அறிவிக்கப்பட்டிருந்த சிஏ (இண்டர்) தேர்வுகள் தள்ளி வைப்பு. இது சம்பந்தமாக இந்தியப் பட்டயக் கணக்காளர் கழகத்திற்கு டிசம்பர் 18 அன்று கடிதம் எழுதியிருந்தேன். இந்த நிலையில் ஜனவரி 15 அறிவிக்கப்பட்டிருந்த தேர்வு ஜன 19 அன்று மாற்றப்பட்டுள்ளது. மாற்றியதற்கு வேறு காரணத்தை சொல்லியுள்ளதன் மூலம் அவர்கள் ஆறுதல் அடைந்து கொள்ளட்டும் என்று பதிவிட்டுள்ளார்.

Tags : CA ,Pongal ,Chennai ,Chartered Accountants of India ,Pongal festival ,Tamil Nadu ,
× RELATED சென்னை போலீஸ்காரர் விஷம் குடித்து தற்கொலை