×

3 பக்கம் இருந்து கூட்டணி அழைப்பாம்… எந்த பக்கம் சாய போகிறார் ராமதாஸ்: சேலத்தில் இன்று நடக்கும் பாமக பொதுக்குழுவில் முக்கிய அறிவிப்பு

சேலம்: மூன்று பக்கம் இருந்து கூட்டணி அழைப்பு வந்து உள்ளதாம். இதில், எந்த பக்கம் ராமதாஸ் சாய போகிறார் என்பது குறித்து இன்று சேலத்தில் நடக்கும் பொதுக்குழுவில் அறிவிக்க உள்ளார். சேலத்தில் பாமக செயற்குழு, பொதுக்குழு கூட்டம், சேலம் 5 ேராட்டில் உள்ள ரத்தினவேல் ஜெயக்குமார் திருமண மண்டபத்தில் இன்று (29ம் தேதி) நடக்கிறது. இதில் பாமக நிறுவனர் ராமதாஸ் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொள்கின்றனர். பாமக செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க, பாமக நிறுவனர் ராமதாஸ், நேற்று மதியம் கார் மூலம் சேலம் வந்தார்.

பின்னர், அவர் தங்கும் ஓட்டலுக்கு சென்றார். அப்போது செய்தியாளர்கள் பொதுக்குழு குறித்து கேட்டபோது, ‘பொதுக்குழுவை நாளை (இன்று) பாருங்கள். நாளைக்கு சொல்ல வேண்டியதை இன்று சொன்னால் உப்பு, சப்பில்லாமல் போகும். கூட்டணி பற்றிய அறிவிப்பு வெளியிட பொதுக்குழு எனக்கு அறிவிப்பு கொடுக்கும்’ என்றார். இந்த பொதுக்குழு மாற்றத்தை உருவாக்குமா? என்ற கேள்விக்கு, எதிர்பாருங்கள் என தெரிவித்தார்.

நேற்று வெளியிட்ட வீடியோ தொடர்பான கேள்விக்கு, நாளை என் பேச்சை கேட்டு விட்டு, மீண்டும் என்னை செய்தியாளர்கள் சந்தியுங்கள் என்றார். இந்நிலையில், கூட்டம் நடைபெறும் திருமண மண்டபத்தில் இறுதிக்கட்ட ஏற்பாடுகளை பாமக கவுரவத்தலைவர் ஜி.கே.மணி மற்றும் மாநில இணை பொதுச்செயலாளர் அருள் எம்எல்ஏ, சேலம் மாநகர், மாவட்ட செயலாளர் கதிர்.ராசரத்தினம் உள்ளிட்ட நிர்வாகிகள் பார்வையிட்டனர். பின்னர், பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி எம்எல்ஏ செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சேலத்தில் நாளை (இன்று) 29ம் தேதி காலை 10 மணிக்கு, பாமகவின் செயற்குழுவும், 11.30 மணிக்கு பொதுக்குழுவும் நடைபெற உள்ளது. 2026ம் ஆண்டு தேர்தலுக்கான கூட்டணி குறித்து, நிறுவனர் ராமதாஸ் முக்கிய அறிவிப்பை வெளியிடுவார். பாமகவுக்கு நெருக்கடியான சூழ்நிலை மாறியுள்ளது. இக்கட்சியை அபகரிப்பதற்கும், பிளவுபடுத்துவதற்கும், அன்புமணி செய்து வந்த நடவடிக்கைகள், ராமதாசுக்கு மிகவும் மனஉளைச்சலையும், வேதனையையும் ஏற்படுத்தியது.

அன்புமணி பின்னால் போனவர்களில் பலர், தெரியாமல் போய் மாட்டிக்கொண்டனர். ராமதாஸ் தான் நமக்கு அடையாளம். அவரை விட்டு வந்து விட்டோமே என்று சொல்லி மிகுந்த வேதனையில் உள்ளனர். அங்கிருப்பவர்களில் பலர், நாங்கள் தப்பு செய்து விட்டோம். ராமதாசிடம் எந்த முகத்தோடு வருவது என பேசி வருகின்றனர். மீண்டும் அங்கிருந்து நிறைய பேர் வருவார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். அது நடக்கத்தான் போகிறது. இது தனித்து போட்டியிடும் காலம் இல்லை. ராமதாஸ் தலைமையில் கூட்டணி அமைத்தே பாமக போட்டியிடும்.

கூட்டணி குறித்து நாங்கள் யாரிடமும் பேசவில்லை. மற்ற கட்சிகளும் இதுவரை பேச ஆரம்பிக்கவில்லை. வாய்ப்பு, சூழ்நிலைகளை பார்த்து ராமதாஸ் முடிவு செய்வார். 3 பக்கமும் இருந்து எங்களுக்கு அழைப்பு இருக்கிறது.  பொதுக்குழு நடத்தக்கூடாது என்று சொல்வதற்கு அன்புமணிக்கும், அவரை சார்ந்தவர்களுக்கும் எந்த அதிகாரமும் இல்லை. உரிமையும் இல்லை. அன்புமணி போகும் இடமெல்லாம், அவருடன் இருப்பவர்கள் செலவு செய்து கூட்டத்தை கூட்டுகின்றனர்.

அவருடன் இருப்பவர்கள் எல்லோரும் இங்கு வருவார்கள் அல்லது அன்புமணி காலை வாருவார்கள். அன்புமணி, கட்சியை பிளவுப்படுத்தி அபகரிப்பதற்காக, திட்டமிட்டு சூழ்ச்சி செய்தார். எப்போதும் சதி, சூழ்ச்சி வெற்றி பெறாது. தேர்தல் ஆணையத்தை நம்புகிறோம். அப்படி இல்லை என்றால், அங்கீகரிக்கப்படாத கட்சி என்று அவர்கள் சொல்லலாம். நீதிமன்றமும் தேவைப்பட்டால் சிவில் நீதிமன்றத்திற்கு செல்லலாம் என்று கூறியுள்ளது. இவ்வாறு ஜி.கே.மணி எம்எல்ஏ கூறினார்.

* அன்புமணி போகும் இடமெல்லாம், அவருடன் இருப்பவர்கள் செலவு செய்து கூட்டத்தை கூட்டுகின்றனர். அவருடன் இருப்பவர்கள் எல்லோரும் இங்கு வருவார்கள் அல்லது அன்புமணி காலை வாருவார்கள்.

Tags : Ramadoss ,PMK ,Salem ,Salem, Salem 5th… ,
× RELATED தமிழ்நாட்டில் உள்ள நம் சகோதரிகள்...