மதுரை: மிகவும் ஆபத்தான ஒரு சூழலில் தற்போது நாம் இருக்கிறோம். தேர்தலுக்கு முன்பாக சாதி பெயரால், மதத்தின் பெயரால் வன்முறை நடத்த வாய்ப்பு உள்ளது என திருமாவளவன் தெரிவித்தார். மக்கள் அதிகாரக் கழகத்தின் சார்பில் மதுரையில் நேற்று நடந்த சாதி மறுப்பு புரட்சிகர மணவிழாவில் பங்கேற்று விடுதலைச்சிறுக்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேசியதாவது: திருப்பரங்குன்றம் விவகாரம் திட்டமிட்ட ஒன்று.
தேர்தலுக்கு முன்பாக சாதி பெயரால், மதத்தின் பெயரால் வன்முறை நடத்த வாய்ப்பு உள்ளது. மிகவும் ஆபத்தான ஒரு சூழலில் தற்போது நாம் இருக்கிறோம். தற்போது சிலர் கடப்பாறைகளை தூக்கிக்கொண்டு களத்துக்கு வருகிறார்கள். இது மிகவும் ஆபத்தான அரசியல். தந்தை பெரியாரை, திராவிட கட்சிகளை இழிவு படுத்துகிறார்கள். விமர்சிக்கலாம், இழிவுபடுத்தக்கூடாது. திராவிடம் என்பது எளிய, உழைக்கிற மக்களுக்கானது. சாதிய ஒழிப்பு சிந்தனைவாதிகளுக்கானது. அதை தகர்க்க வேண்டுமென சொல்கின்றனர்.
இதில் நமக்குத் தெளிவு வேண்டும் தெளிவு இல்லையென்றால் இன்னும் 10 முதல் 15 ஆண்டுகளில் வலதுசாரிகள் தமிழ்நாட்டை ஆக்கிரமிப்பு செய்து, இதுபோன்ற சாதி மறுப்பு திருமண நிகழ்வை நடத்த முடியாமல் செய்துவிடுவார்கள். திருப்பரங்குன்றத்தில் வழக்கமான உச்சி பிள்ளையார் கோயிலில்தான் இந்த ஆண்டும் தீபம் ஏற்றப்பட்டது. 1926ல் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்து, எது இஸ்லாமியர்களுக்குரியது, எது காசி விசுவநாதர் கோயிலுக்குரியது என நீதிபதி தீர்ப்பு வழங்கி விட்டார்.
ஆனால், நீதித்துறையில் இருப்பவர்களே வலிந்து வந்து, இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் எதிராக தீர்ப்புகளை எழுதுகிறார்கள் என்றால், எந்த அளவுக்கு அவர்களுக்கு ஆதிக்கம் செலுத்தக்கூடிய சூழல் உருவாகி வருகிறது என்பதை பார்க்க முடிகிறது. சனாதன கொள்கைவாதிகள் வேரூன்ற அதிமுகவினர் அறிந்தே இடம் தருகின்றனர்.
தேர்தல் வரும்; போகும். எத்தனை இடங்களில் போட்டி இடுகிறோம். எதில் வெற்றி பெறுகிறோம் என்பது பிரச்னை இல்லை. விழிப்புணர்வுடன் செயல்பட்டு வலதுசாரிகளை வீழ்த்த வேண்டும் என்பதுதான் நமது கொள்கையாக இருக்க வேண்டும். இவ்வாறு பேசினார்.
