×

மகாத்மா காந்தியின் பெயரை நீக்கியதை கண்டித்து பேசிய சசிகாந்த் செந்திலுக்கு விளக்கம் கேட்டு நாடாளுமன்ற அலுவலகம் நோட்டீஸ்

 

திருவள்ளூர்: மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை உறுதி சட்டத்தை ரத்து செய்து வி பி – ஜி ராம் ஜி சட்டமுன்வடிவு நாடாளுமன்றத்தில் அமல்படுத்தப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வாதங்களை முன் வைத்தனர். இதில் திருவள்ளூர் எம்பி சசிகாந்த் செந்தில் பேசுகையில், இந்த மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை உறுதி திட்டமானது கொரோனா காலத்தில் கிராமப்புற மக்களுக்கு வாழ்வதாரத்திற்கு பாதுகாப்புக் கவசமாக இருந்தது. மேலும் குளங்கள், சாலைகள், பாசன வசதிகள் போன்ற நிலையான கிராமப்புற மேம்பாட்டு பணிகளை உறுதி செய்தது. இந்த திட்டம், கிராமப்புற தொழிலாளர்களின் உரிமை மற்றும் வாழ்வாதார உத்தரவாதமாகும்.

அதனால் எதிர்க்கட்சிகள் உறுப்பினர்களாகிய நாங்கள் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தோம். ஏனெனில் இந்த திட்டத்தின் மூலம் கிராம சபை, ஊராட்சி அமைப்புகளின் அதிகாரத்தை குறைத்து அதிகாரத்தை மையப்படுத்தும் முயற்சிைய ஒன்றிய பாஜ அரசு செய்கிறது. இதனால் எதிர்கட்சி உறுப்பினர்கள் இந்த மசோதாவை எதிர்த்தனர். ஆனால் அதை ஜனநாயகமாக எதிர்கொள்வதற்கு பதிலாக, எதிர்ப்பு தெரிவித்த நான் (சசிகாந்த் செந்தில்) உள்பட எம்பிக்கள் ஜோதிமணி, வெங்கடேசன், ஹிபி ஈடன், குரியகோஸ், எஸ்.முரசொலி, கே.கோபிநாத், ஷாஃபி பரம்பில் ஆகியோருக்கு உரிமை மீறல் புகார் வழங்கப்பட்டுள்ளது.

இதையடுத்து மக்களவை செயலாளர் அலுவலகத்தின் உரிமை மீறல் புகார் குறித்து விளக்கம் கேட்டு எனக்கும் எதிர்க்கட்சி எம்பிக்களுக்கும் அதிகாரப்பூர்வ நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இது ெதாடர்பாக வரும் 2ம் தேதிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. நாடாளுமன்ற உரிமை என்பது கருத்து சுதந்திரத்தை உறுதி செய்வது. இன்று அது எதிர்ப்பை மிரட்ட, குரலை ஒடுக்க, ஆட்சியை விமர்சிப்பவர்களை தண்டிக்க பயன்படுத்தப்படுகிறது. மக்களுக்காக பேசும் எம்பிக்கள் குற்றவாளிகளாக ஆக்கப்படுகிறார்கள். கிராமப்புற ஏழைகளின் குரல் நாடாளுமன்றத்தில் நசுக்கப்படுகிறது. அதிகாரபூர்வ விளக்க நோட்டீஸ் மூலம் மிரட்டுவது வளர்ச்சியல்ல, ஜனநாயகமல்ல.

அது மக்கள் விரோத அரசியல். இந்த கிராமப்புற வேலை உறுதி திட்டம் என்பது ஒரு திட்டமல்ல, அது ஒரு சமூக ஒப்பந்தம். அதை கிழிக்கும் எந்த முயற்சிக்கும் எதிராக குரல் கொடுப்பது குற்றமல்ல, கடமை. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Parliament Office ,Sasikanth Sendil ,Mahatma Gandhi ,
× RELATED கட்சிக்கு விரோதமாக செயல்பட்டதன்...