அரக்கோணம்: அரக்கோணம் ரயில் நிலையத்தில் இன்று காலை உயரழுத்த மின்கம்பத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் ரயில்கள் அரை மணி நேரம் தாமதமாக சென்றது. ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் வழியாக கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கும், வடமாவட்டங்கள் மற்றும் வடமாநிலங்களுக்கு தினமும் நூற்றுக்கணக்கான எக்ஸ்பிரஸ் ரயில்கள் சென்று வருகிறது. அதேபோல் அரக்கோணம், சென்னை இடையே புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படுகிறது. இந்நிலையில் அரக்கோணம்-புளியமங்கலம் ரயில் நிலையங்கள் இடையே உயர் மின்னழுத்த மின்கம்பிகளை தாங்கி நிற்கும் கம்பங்களில் பறவைகள் கூடு கட்டுதல், குரங்குகள் செல்லுதல் போன்றவற்றை தடுக்க பிளாஸ்டிக் மற்றும் ரப்பர் வலைகள் பொருத்தப்பட்டுள்ளது.
அந்த வலைகளில் இன்று காலை சுமார் 6.40 மணியளவில் திடீரென தீப்பற்றியது. வலைகள் கொழுந்துவிட்டு எரிந்தது. இதையறிந்த ரயில்வே ஊழியர்கள், அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து சென்னை-அரக்கோணம், அரக்கோணம்-சென்னை ரயில் மார்க்கங்களில் வந்த ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டது. தொடர்ந்து அங்கு வந்த ஊழியர்கள் தீயை போராடி அணைத்தனர். அதற்குள் அனைத்து பகுதிகளிலும் ரப்பர் வலைகள் எரிந்து சேதமானது. இதையடுத்து வேறு ஏதேனும் மின்னழுத்த கம்பிகள் மற்றும் சிக்னல் ஒயர்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக என்பது குறித்து ஆய்வு செய்தனர். மேலும் தீவிபத்தால் பாதிக்கப்பட்ட மின்கம்பிகளை சுமார் 8.15 மணியளவில் சீரமைத்தனர்.
இதற்கிடையில் தீவிபத்து ஏற்பட்டவுடன் ஆங்காங்கே நிறுத்தப்பட்டிருந்த மின்சார ரயில்கள், எக்ஸ்பிரஸ்கள் ரயில்களை மாற்றுப்பாதை வழியாக சுமார் அரை மணி நேரம் காலதாமதமாக இயக்கப்பட்டது. ரயில்கள் தாமதமானதால் பயணிகள் சிரமத்திற்குள்ளாகினர். தொடர்ந்து தீவிபத்திற்கான காரணம் குறித்து ரயில்வே அதிகாரிகள், ரயில்வே போலீசார், பாதுகாப்பு படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
