×

சிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ரா தரிசன விழா: கொடியேற்றத்துடன் தொடங்கியது

 

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் மார்கழி ஆருத்ரா தரிசன விழா இன்று காலை கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக தொடங்கியது. கடலுார் மாவட்டம் சிதம்பரத்தில் உலக புகழ்பெற்ற நடராஜர் கோயில் உள்ளது. இக்கோயிலில் மார்கழி மாதத்தில் ஆருத்ரா தரிசனம் மற்றும் ஆனி மாதம் ஆனி திருமஞ்சனம் ஆகிய இருபெரும் தரிசன விழாக்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான ஆருத்ரா தரிசன விழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில் நடராஜர் சன்னதிக்கு முன்பு அமைந்துள்ள கொடி மரத்தில், வேத மந்திரங்கள் முழங்க, உற்சவ ஆச்சாரியார் சிவாநாத் தீட்சிதர் காலை 8 மணிக்கு கொடியேற்றி உற்சவத்தை துவக்கி வைத்தார். இதில் உள்ளூர், வெளியூர், வெளிமாவட்டம், வெளிமாநிலம் என ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

அதனை தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெறும் திருவிழாவில் வரும் 26ம் தேதி வெள்ளி சந்திர பிரபை வாகன வீதியுலா, 27ம் தேதி தங்க சூரிய பிரபை வாகனத்தில் வீதியுலா நடைபெறுகிறது. 28ம் தேதி வெள்ளி பூத வாகனத்தில் வீதியுலாவும், 29ம் தேதி வெள்ளி ரிஷப வாகனத்தில் தெருவடைச்சான் உற்சவம், 30ம் தேதி வெள்ளி யானை வாகன வீதியுலா, 31ம் தேதி தங்க கைலாச வாகன வீதியுலா நடைபெறுகிறது. 2026 புத்தாண்டு தினமான ஜனவரி 1ம் தேதி தங்க ரதத்தில் சோமாஸ்கந்தர் வெட்டுக்குதிரை வாகனத்தில் வீதியுலா நடைபெறுகிறது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேர் திருவிழா ஜனவரி 2ம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் காலை மூலவரான ஸ்ரீ நடராஜர் சிவகாமசுந்தரி அம்பாள் தேரில் எழுந்தருள பக்தர்கள் வடம் பிடித்து நான்கு வீதிகள் வழியாக இழுத்து செல்வார்கள்.

அன்று இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன் முகப்பு மண்ட பத்தில் ஏககால லட்சார்ச்சனையும், ஜனவரி 3ம் தேதி சூரிய உதயத் துக்கு முன்பு, அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரை ஸ்ரீசிவகா மசுந்தரி சமேத ஸ்ரீமத் நடராஜமூர்த்திக்கு மகாபிஷேகம் நடை பெறுகிறது. அதனைத் தொடர்ந்து காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜையும், பஞ்சமூர்த்தி வீதியுலா வந்த பின்னர், பிற்பகல் 2 மணிக்கு மேல் ஆருத்ரா தரிசனமும், ஞான காச சித்சபா பிரவேசமும், நடைபெறுகிறது. இதில் ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து, நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள் நடனமாடியபடி பக்தர்களுக்கு காட்சி கொடுக்கும் தரிசன விழா நடக்கிறது. ஜனவரி 4ம் தேதி பஞ்சமூர்த்திகள் முத்துப்பல்லக்கு வீதியுலாவும், 5ம் தேதி ஞானப்பிரகாசம் குளத்தில் தெப்ப உற்சவமும் நடைபெறுகின்றன.

Tags : Chidambaram Natarajar Temple Arutra Vision Festival ,Chidambaram ,Marghazi Arutra Darisana Festival ,Chidambaram Natarajar Temple ,Natarajar Temple ,Chidambaram, Kadalur district ,Aruthra ,Darshan ,Ani ,Marghazi ,Ikoil ,
× RELATED பறவை காய்ச்சல் எதிரொலியாக தமிழக, கேரள...