- சீனா
- அருணாச்சல
- இந்தியா
- அமெரிக்க பாராளுமன்றம்
- வாஷிங்டன்
- அமெரிக்க இராணுவம்
- ஐங்கோணம்
- அருணாச்சலப் பிரதேசம்
- அருணாச்சல பிரதேசம்
வாஷிங்டன்: அருணாச்சல பிரதேசத்தை தனது நாட்டின் முக்கிய நலன்கள் சார்ந்த பகுதிகளில் ஒன்றாக சீனா இணைத்துள்ளதாக அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தின் சுமார் 90,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவை ‘ஜாங்னான்’ அல்லது ‘தெற்கு திபெத்’ என சீனா உரிமை கொண்டாடி வருகிறது. மேலும் அப்பகுதியை தனது நாட்டின் ஒருங்கிணைந்த பகுதி என தொடர்ந்து வாதிட்டு வருகிறது. ஆனால், அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் பிரிக்க முடியாத அங்கம் என்பதில் ஒன்றிய அரசு உறுதியாக உள்ளது. கடந்த 2024ம் ஆண்டு அக்டோபர் மாதம் உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் ராணுவ விலகல் தொடர்பான ஒப்பந்தம் இந்தியா மற்றும் சீனா இடையே கையெழுத்தானது.
இருப்பினும், இரு நாடுகளுக்கும் இடையே பரஸ்பர நம்பிக்கையின்மை தொடர்ந்து நீடித்து வருவதால் உறவில் விரிசல் நிலையே காணப்படுகிறது. சீனாவின் இத்தகைய எல்லை அத்துமீறல்கள் மற்றும் சர்ச்சைக்குரிய பகுதிகளில் மேற்கொள்ளும் உள்கட்டமைப்பு மேம்பாடுகள் அண்டை நாடுகளுடனான உறவை கேள்விக்குறியாக்கியுள்ளது. இந்நிலையில், நேற்று அமெரிக்க நாடாளுமன்றத்தில் பென்டகன் தாக்கல் செய்த அறிக்கையில், தைவான், தென் சீனக் கடல் மற்றும் சென்காகு தீவுகளைப் போலவே அருணாச்சல பிரதேசத்தையும் தனது ‘முக்கிய நலன்கள்’ பட்டியலில் சீனா தற்போது அதிகாரப்பூர்வமாக இணைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் எவ்வித பேச்சுவார்த்தைக்கோ அல்லது சமரசத்துக்கோ இடமில்லை எனவும், ‘2049ம் ஆண்டுக்குள் சீன தேசத்தின் பெரும் மறுமலர்ச்சி’ என்ற இலக்கை அடையவும், இறையாண்மையை பாதுகாக்கவும், உலகத் தரம் வாய்ந்த ராணுவத்தை உருவாக்குவதே இதன் நோக்கம் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான உறவு ஆழமாவதைத் தடுக்கும் நோக்கில் சீனா செயல்படுவதாகவும், சீனாவின் நீண்டகால நோக்கங்கள் மீது இந்தியாவுக்கு சந்தேகம் நீடிப்பதாகவும் பென்டகன் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
