கோவை: தை பிறந்தால் வழி பிறக்கும். கூட்டணிக்கு இன்னும் ஒரு மாசம் காத்திருங்கள் என்று நயினார் நாகேந்திரன் கூறினார். கோவை விமான நிலையத்தில் பாஜ மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று அளித்த பேட்டி: தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயல் உள்ளிட்டோர் கமலாலயத்தில் மூத்த நிர்வாகிகளுடன் தேர்தல் கள நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தினர். பின்னர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார்கள். அப்போது, தொகுதி பங்கீடு தொடர்பாக எதுவும் பேசவில்லை. முதற்கட்டமாக கள நிலவரம் எப்படி இருக்கிறது என கேட்டார்கள். டிடிவி தினகரன், ஓபிஎஸ் கூட்டணியில் இணைப்பது குறித்து எதுவும் பேசவில்லை. ஒத்த கருத்துள்ள அனைவரும் ஒன்றிணைய வேண்டும். அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை, எதிரியும் இல்லை. தேமுதிக, பாமக கூட்டணிக்கு வருவார்களா என இனிதான் தெரியும். தை பிறந்தால் வழி பிறக்கும் என சொல்வதை போல, பொங்கல் முடிந்த பிறகு நல்ல காரியங்கள் நடக்கும். டிசம்பரில் தெளிவு பிறக்கும் என கூறியது ஒரு மாதம் தள்ளிப்போகிறது, அவ்வளவுதான்.இவ்வாறு அவர் கூறினார்.
* விஜய் ஒரு ஸ்பாய்லரா?
ஆலோசனை கூட்டத்தில் விஜய் ஒரு ஸ்பாய்லர் என்று பியூஸ் கோயால் சொன்னதாக தகவல் வருகிறதே என்று நிருபர்கள் கேட்டதற்கு, ‘தவெக தலைவர் விஜய் மற்ற கட்சிகளின் வெற்றியை பாதிக்கும் ஸ்பாய்லர் என சொல்ல முடியாது. இன்னும் தேர்தலுக்கு 3 மாதம் இருக்கிறது. யார் யார் பக்கம் இருக்கிறார்கள், எந்த பக்கம் சேர்கிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். விஜய் குறித்து இன்றைய கூட்டத்தில் பேசப்படவில்லை’ என்றார்.
