×

சேலம் தெற்கு தொகுதியில் போட்டியிட கூவத்தூரில் கோல்டு பிஸ்கட் சப்ளை செய்த ஜூவல்லரி அதிபருக்கு சீட்? எடப்பாடி சொந்த மாவட்டத்தில் அதிமுகவினர் கொந்தளிப்பு

சேலம்: சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி குறித்தான பேச்சுவார்த்தையை தொடங்கிவிட்டன. அதேநேரத்தில் தொகுதியை கைப்பற்றும் வகையில் நிர்வாகிகளும் தீவிரம் காட்டி வருகின்றனர். தற்போது எம்எல்ஏக்களாக இருப்பவர்களும் அதே தொகுதியை கைப்பற்றும் நடவடிக்கையை எடுத்து வருகிறார்கள். இவர் தான் போட்டிபோட வேண்டுமா? எங்களுக்கு ஒதுக்க கூடாதா? என்ற வாதங்களும் எழுந்து விட்டது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்தில் தெற்கு தொகுதியை பிடிப்பதில் நிர்வாகிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இத்தொகுதியை பொறுத்தவரையில் அனைத்து சமூக மக்களும் சமஅளவில் வசிப்பதால் அதிமுகவில் அனைவரும் போட்டியிட மிகுந்த ஆர்வமாக இருப்பார்கள். அதன்படி தற்போது வரை இத்தொகுதியில் மாஜி எம்எல்ஏக்கள் செல்வராஜ், சக்திவேல், ரவிச்சந்திரன், சிட்டிங் எம்எல்ஏ பாலசுப்பிரமணியம், 10 பகுதி செயலாளர்கள் உள்பட 30 பேர் வரை விருப்பமனு கொடுத்துள்ளனர். மாநகரத்தை சேர்ந்தவர்கள் இவ்வளவு பேர் மனு தாக்கல் செய்திருந்தாலும் சேலம் புறநகர் மாவட்டத்தில் இருந்தும் சிலர் விருப்பமனு தாக்கல் செய்துள்ளது மாநகர அதிமுகவினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. புறநகரை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் களம் இறங்கி, தீபாவளியன்று 30 நிர்வாகிகளுக்கு வேட்டி-சேலை இனிப்பு வழங்கி அசத்தினார். இதனால் உள்ளூர் அதிமுகவினர் கடுப்பாகி போனார்கள். இந்த அதிர்ச்சி நீங்குவதற்குள், புறநகரைச் சேர்ந்த ஜூவல்லரி அதிபர் ஒருவர் விருப்பமனு மனு கொடுத்துள்ளது மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த நகைக்கடை அதிபர் குறித்து மகிழ்ச்சி தரும் செய்தியையும் அதிமுகவினர் கூறிவருகின்றனர். முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமாவையடுத்து, யார் முதல்வர் என்ற கேள்வி எழுந்தபோது, நான் இருக்கிறேன் என ஓடி வந்தவர் சின்ன மம்மியான சசிகலா. அந்த நேரத்தில் உஷாரான பாஜ ஒன்றிய அரசு, சொத்து குவிப்பு வழக்கை கையில் எடுத்து, 4 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கி சசிகலாவை சிறைக்குள் அனுப்பியது. அந்தநேரத்தில் தற்போதைய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முதல்வர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டார்.

அப்போது, ஒவ்வொரு எம்எல்ஏக்களுக்கும் கோல்டு பிஸ்கட், ‘ப’ வைட்டமின் வழங்கப்பட்டது. அப்போது கோல்டு பிஸ்கட் சப்ளை செய்ததில் அந்த நகைக்கடை அதிபரும் ஒருவராம். சரியான நேரத்தில் கைதூக்கி விடுவோம் என வாக்குறுதி கொடுக்கப்பட்டதாம். அவர் ஓமலூரில் இருக்கும் பட்சத்தில் தெற்கு தொகுதியில் விருப்பமனு தாக்கல் செய்ய சொன்னது மேலிடம் என்று சொல்லப்படுகிறது. இதனால் மீண்டும் அதிமுகவினரிடையே பீதி ஏற்பட்டுள்ளது. அவ்வாறு தொகுதி மாற்றி கொடுத்தால் தகுந்த பாடத்தை கற்பிப்போம் என்கின்றனர் அதிமுகவினர்.

Tags : Koovathur ,Salem South ,AIADMK ,Salem ,
× RELATED அன்புமணிக்கு ஜி.கே.மணி கடும் கண்டனம்