திருவனந்தபுரம்: சபரிமலையில் இவ்வருட மண்டலகாலம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. வரும் 27ம் தேதி பிரசித்தி பெற்ற மண்டல பூஜை நடைபெறுகிறது. அன்று காலை 10.10க்கும், 11.30 மணிக்கும் இடையே மண்டல பூஜை நடைபெறும். மண்டல பூஜையை முன்னிட்டு ஐயப்ப விக்ரகத்தில் தங்க அங்கி அணிவிக்கப்படுவது வழக்கமாகும்.
இந்த தங்க அங்கி திருவிதாங்கூர் மன்னர் சபரிமலைக்கு காணிக்கையாக வழங்கியதாகும்.
இது ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலில் வைக்கப்பட்டுள்ளது. மண்டல பூஜை நடைபெறும் போது இந்த தங்க அங்கி அங்கிருந்து ஊர்வலமாக எடுத்து வரப்படும். இவ்வருட மண்டல பூஜையை முன்னிட்டு தங்க அங்கி ஊர்வலம் இன்று காலை 7 மணிக்கு புறப்படுகிறது. வரும் 26ம் தேதி மாலை இந்த ஊர்வலம் சன்னிதானத்தை அடையும்.
அன்று மாலை ஐயப்ப விக்ரகத்தில் தங்க அங்கி அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெறும். மறுநாள் பிரசித்தி பெற்ற மண்டல பூஜை நடைபெறும். அன்று இரவு சபரிமலை கோயில் நடை சாத்தப்படும்.
