மதுரை, டிச. 22: விடுமுறை மற்றும் ஐயப்ப பக்தர்கள் வருகை காரணமாக, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நேற்று கூட்டம் அலைமோதியது. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு, நாள்தோறும் பல்வேறு மாவட்டம் மற்றும் மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருகை தந்து சுவாமி மற்றும் அம்மனை தரிசனம் செய்து செல்வது வழக்கம். இதற்கிடையே விடுமுறை நாட்களில் பக்தர்களின் வருகை அதிகம் இருப்பது வழக்கம்.
இதன்படி நேற்று விடுமுறை தினம் என்பதுடன், தற்போது சபரிமலை ஐயப்பன் கோயில் மற்றும் மேல்மருவத்தூர் செல்லும் பக்தர்கள் வருகை அதிகமாக இருந்ததால், கோயிலில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் அவர்கள் அனைவரும், அம்மன் மற்றும் சுவாமியை நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
இதனுடன் எதிர்வரும் கிறிஸ்துமஸ் மற்றும் பொங்கல் பண்டிகைகளை முன்னிட்டு., மீனாட்சி அம்மன் கோயிலின் சுற்றுப்பகுதிகளில் உள்ள கடைகளில் நாள்தோறும் ஆடைகள் மற்றும் பொருட்கள் வாங்க மக்கள் வருகை அதிகரித்துள்ளது. நேற்று விடுமுறை தினம் என்பதால் இவர்களும் அதிக அளவில் காணப்பட்டனர். இதனால் சித்திரை வீதியில் உள்ள கடைகள் மற்றும் நகை, ஜவுளி கடைகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதனால் அப்பகுதிகளில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
