- காசிபாளையம்
- திருப்பூர்
- திருப்பூர் காங்கயம் ரோடு
- ஊத்துக்குளி
- ஈரோடு
- சேலம்
- காங்கயம் ரோடு
- முத்துலிபாளையம்
- உத்துகுலி வீதி
- காங்கயம் சாலை…
திருப்பூர், டிச. 18: திருப்பூர் காங்கயம் சாலையில் இருந்து ஊத்துக்குளி மார்க்கமாக ஈரோடு, சேலம் செல்லக்கூடிய வாகனங்கள், காங்கயம் சாலையில் இருந்து முதலிபாளையம் பகுதியில் செயல்படும் தொழிற்பேட்டை, பொது சுத்தகரிப்பு நிலையம், பள்ளி கல்லூரி, ஊத்துக்குளி சாலையில் இருந்து காங்கயம் சாலை மற்றும் திருப்பூருக்கு வரக்கூடிய வாகனங்கள் என தினந்தோறும் ஆயிரக்கணக்கான இருசக்கர வாகனங்கள் முதல் கனரக வாகனங்கள் வரை பயணம் மேற்கொள்ளக்கூடிய பிரதான சாலையாக நல்லூர்- காசிபாளையம் சாலை இருந்து வருகிறது.
இந்த சாலையில் கடந்த சில வாரங்களாக பாதாள சாக்கடை பணிகள் மற்றும் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்றது. பணிகள் முடிவடைந்து பள்ளங்கள் மூடப்பட்டு சென்ற நிலையில் சாலையின் நடுவே தார்சாலை அமைக்கப்படாமல் உள்ளது. இதன் காரணமாக நல்லூர் ஈஸ்வரன் கோயில் பகுதியில் இருந்து காசிபாளையம் வரை சுமார் 1.5 கி.மீ. தூரத்திற்கு சாலையின் நடுவே பள்ளமாக காட்சியளிக்கிறது. மேலும் ஒரு பகுதி தார்சாலை அமைப்பதற்காக ஜல்லிக்கற்கள் மட்டும் கொட்டப்பட்டு சென்ற நிலையில் முழுவதுமாக தார்சாலை அமைக்கப்படாமல் உள்ளது.
இதனால் ஒரே சாலையில் ஒரு பகுதி மேடாகவும், மறுபுறம் பள்ளமாகவும் உள்ளது. இதனால் இவ்வழியே பயணம் மேற்கொள்ளும் இருசக்கர வாகனம் முதல் கனரக வாகனங்கள் ஓட்டிகள் வரை பெரும் சிரமம் அடைகின்றனர். மேலும் நேற்று முன்தினம் பெய்த மழையின் காரணமாக சாலை முழுவதும் சேறும், சகதியுமாக காட்சியளிப்பதால் நடந்து செல்லும் பாதசாரிகளும் மிகப்பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
இது குறித்து அவ்வழியே செல்லும் சரக்கு ஆட்டோ ஓட்டுநர் கூறுகையில், சாலையின் நடுவே பள்ளம் இருப்பதன் காரணமாக கனரக வாகனங்கள் இந்த பகுதியை கடந்து செல்வது மிகப்பெரும் சிரமமாக உள்ளது. இரவு நேரங்களில் பள்ளம் இருப்பது சரிவர தெரியாததால் விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே இதனை சம்பந்தப்பட்ட துறையினர் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதாள சாக்கடை அல்லது குடிநீர் திட்ட பணிகளுக்கு பள்ளம் தோண்டப்பட்டால் பணிகள் முடிந்து உடனடியாக அந்த சாலைகளின் தேவையை கருத்தில்கொண்டு உடனடியாக சீர்செய்ய முனைப்பு காட்ட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
