புதுச்சேரி, டிச. 18: புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியை சேர்ந்த பெண், காவலர் உடல் தகுதி தேர்வு பயிற்சிக்காக கோரிமேடு போலீஸ் மைதானத்திற்கு தினமும் சென்று வருவது வழக்கம். அப்போது தன்னுடன் தனது 11 வயது மகனையும் அழைத்து வருவார். அவர் பள்ளியில் படித்து வருகிறார். அந்த பெண்ணுக்கு கோரிமேடு பகுதியை சேர்ந்த பயிற்சியாளர் மதன்குமார் (34) என்பவர் பயிற்சி அளித்து வந்தார். அப்போது தாயுடன் வந்த மாணவனிடம் பயிற்சியாளர் மதன்குமார், ஆபாச செயலில் ஈடுபட்டதாக தெரிகிறது. இது குறித்து மாணவன், தனது பாட்டியிடம் தெரிவிக்க, அவர் இது பற்றி கோரிமேடு காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார், போக்சோ சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து பயிற்சியாளர் மதன்குமாரை கைது செய்தனர்.
