தேனி, டிச. 17: தேனி மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் ஆட்சி மொழி சட்டவார விழா இன்று முதல் ஒரு வாரம் நடத்தப்பட உள்ளது. தமிழ்வளர்ச்சித்துறை சார்பில், தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் இயற்றப்பட்ட 27.12.1956ம் நாளை நினைவுகூறும் வகையில் நடப்பு ஆண்டில் ஆட்சிமொழிச் சட்ட வாரம் ஒரு வார காலத்திற்கு அனைத்து மாவட்டங்களிலும் கொண்டாட வேண்டுமென தமிழ் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, தேனி மாவட்டத்தில் ஆட்சிமொழிச் சட்ட வாரம் இன்று 17ம் தேதி முதல் வருகிற 26ம் தேதி வரை ஒரு வார காலத்திற்கு கொண்டாடப்படவுள்ளது. ஆட்சிமொழிச் சட்ட வாரம் தொடர்பான நிகழ்ச்சிகள் ஒவ்வொரு நாளும் காலை 10.30 மணி முதல் நடைபெற உள்ளது.
ஆட்சிமொழிச் சட்ட வார விழா தொடர்பான நிகழ்வின் ஒருபகுதியாக இன்று தமிழ் அமைப்புகள், நிர்வாகிகளுடன் இணைந்து சின்னமனூர் கிளை நூலகத்தில் ஆட்சிமொழித் திட்ட விளக்கக் கூட்டமும், நாளை 18ம் தேதி மாவட்ட கலெக்டர் தலைமையில் தொழிலாளர் துறையினருடன் வணிக நிறுவன உரிமையாளர்கள், வணிக நிறுவன அமைப்புகளுடன் இணைந்து வணிக நிறுவனங்களின் தமிழில் பெயர்ப்பலகை அமைத்திட வலியுறுத்தி தொழிலாளர் உதவி ஆணையர் (சட்ட அமலாக்கம்) அலுவலகத்தில் கலந்தாய்வுக் கூட்டமும் நடைபெறவுள்ளன.
இதனைத்தொடர்ந்து வருகிற 19ம் தேதி, 22ம் தேதி மற்றும் 23ம் தேதிகளில் ஆட்சிமொழிச் சட்ட அரசாணை, மொழிப் பயிற்சி, கலைச்சொல்லாக்கம், வரைவுகள், குறிப்புகள் எழுதுதல், கணினித்தமிழ் ஒருங்குறி பயன்பாடு, முதலிய தலைப்புகளில் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக புதியக் கூட்ட அரங்கில் அரசுப் பணியாளர்களுக்கு பயிற்சியும், 24ம் தேதி தேனி அரசு சட்டக் கல்லூரியில் மாணவ மாணவியர்கள் பங்கேற்கும் வகையிலான பட்டிமன்றம் நடைபெற உள்ளது.
ஆட்சிமொழிச் சட்டவார விழாவின் முக்கிய நிகழ்வாக நிறைவு நாளான வருகிற 26ம் தேதி காலை 10 மணியளவில் அரசுப் பணியாளர்கள், தமிழ் அமைப்புகள், தமிழறிஞர்கள், பள்ளி கல்லூரி மாணவர்கள் பங்கேற்கும் ஆட்சிமொழி விழிப்புணர்வுப் பேரணி நடைபெற உள்ளது. இத்தகவலை தேனி மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார்.
