×

ஈரானுக்கு காத்திருக்கும் ஆபத்து அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கையால் கடும் பதற்றம்

துபாய்: வளைகுடா நாடுகள் மீது ஈரான் நேற்று தாக்குதல் நடத்திய நிலையில் இன்று என்ன நடக்க போகிறது என்று பாருங்கள் என்று ஈரானுக்கு அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனால் எந்த நேரத்திலும் அமெரிக்கா பயங்கர தாக்குதல் நடத்தலாம் என்று கூறப்படுவதால் கடும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா,இஸ்ரேல் நாடுகள் ஈரான் மீது தாக்குதல் நடத்தியதால், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மற்றும் எண்ணெய் கட்டமைப்புகளை குறி வைத்து ஏவுகணைகள், டிரோன்கள் மூலம் ஈரான் தாக்கி வருகிறது. போர் நேற்று 14-வது நாளை எட்டிய நிலையில் சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளின் மீது ஈரான் அடுத்தடுத்து ஏவுகணை, டிரோன் தாக்குதல் நடத்தியது.

இந்த நிலையில், நேற்று சவுதி அரேபியா மீது 50க்கும் மேற்பட்ட டிரோன்களை வீசியது. அந்த டிரோன்களை சவுதி அரேபியா இடைமறித்து அழித்தது. ஈரான் ஏவிய 2 டிரோன்கள் ஓமன் நாட்டின் தொழிற்சாலையில் விழுந்ததில் 2 தொழிலாளர்கள் பலியானார்கள். பஹ்ரைனிலும் ஏவுகணை தாக்குதல் அச்சுறுத்தலால் சைரன் ஒலிகள் எழுப்பப்பட்டன. துபாய் சர்வதேச நிதி மையத்தில்(டிஎப்ஐசி) டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. வான் பாதுகாப்பு அமைப்புகள் டிரோன்களை இடைமறித்தாலும் நொறுங்கி விழுந்த சிதறல்கள் கட்டிடங்களின் மீது விழுந்து சேதம் ஏற்பட்டது.

ஈரானுக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா போராளிகளும் இஸ்ரேல் மீது ராக்கெட்டுகளை ஏவி தாக்குதல் நடத்தினர். வடக்கு இஸ்ரேலில் நடந்த தாக்குதலில் 60 பேர் படுகாயமடைந்தனர். ஹிஸ்புல்லாக்களின் தாக்குதல்களுக்கு பதிலடியாக பெய்ரூட்டின் தென் மேற்கு புறநகர் பகுதியில் இரண்டு இடங்களில் இஸ்ரேல் வான்வாழி தாக்குதல் நடத்தியது. இதில் ஒருவர் பலியானார். கட்டிடம் பலத்த சேதமடைந்தது என்று லெபனான் தெரிவித்தது. ஈரான் நாட்டின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி, மேற்கு ஆசியாவில் உள்ள அமெரிக்க தளங்களின் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று எச்சரித்திருந்தார்.

இந்த நிலையில், ஈரானுக்கு கடுமையாக எச்சரிக்கை விடுக்கும் வகையில் தனது ட்ரூத் சோசியலில் அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று பதிவிடுகையில், ஈரானின் பயங்கரவாத ஆட்சியை ராணுவ ரீதியிலும், பொருளாதார ரீதியிலும், மற்ற அனைத்து நிலைகளிலும் அழித்து வருகிறோம். ஆனால், சில பத்திரிகைகளை நீங்கள் படித்தால் நாம் வெற்றி பெறவில்லை என்று நீங்கள் தவறாக நினைக்கக்கூடும்.இந்த மனநிலை பாதிக்கப்பட்ட அயோக்கியர்களுக்கு இன்று என்ன நடக்கிறது என்று பாருங்கள். ஈரானின் கடற்படை போய்விட்டது, அவர்களின் விமானப்படை இனி இல்லை, ஏவுகணைகள்,டிரோன்கள் மற்றும் மற்ற அனைத்தும் அழிக்கப்பட்டு வருகின்றன. மேலும் அவர்களின் தலைவர்கள் பூமியின் முகத்திலிருந்து துடைத்தெறியப்பட்டுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார்.

டிரம்ப் வெளியிட்டுள்ள இன்னொரு பதிவில், அவர்கள் கடந்த 47 ஆண்டுகளாக உலகம் முழுவதும் அப்பாவி மக்களை கொன்று வருகிறார்கள். தற்போது, அமெரிக்காவின் 47 வது அதிபராக பதவியேற்றுள்ள நான் இப்போது ஈரானியர்களை கொன்று வருகிறேன். இதைச் செய்வது எவ்வளவு பெரிய கவுரவம் என குறிப்பிட்டுள்ளார்.இதனால், ஈரான் மீது எந்த நேரத்திலும் அபாயகரமான தாக்குதல்களை நடத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக அரசியல் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பிரான்ஸ் ராணுவ வீரர் பலி: இதற்கிடையே, ஈராக் ராணுவத்திற்கு பயிற்சி அளிப்பதற்கு பிரான்ஸ் ராணுவ வீரர்கள் அங்கு சென்றுள்ளனர். கடந்த ஜனவரி மாதம் முதல் எர்பில் பிராந்தியத்தில் உள்ள மாலா கரா ராணுவ தளத்தில் வீரர்களுக்கு பயற்சி அளித்து வருகின்றனர். இந்த நிலையில், எர்பில்லில் உள்ள ராணுவ தளத்தின் மீது ஈரான் டிரோன் தாக்குதல் நடத்தியது. இதில் ஒரு பிரான்ஸ் வீரர் பலியானார். 6 பேர்படுகாயமைடைந்தனர் என்று பிரான்ஸ் ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலுக்கு பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

டெஹ்ரானில் குண்டுவெடிப்பு: பாலஸ்தீனர்களுக்கு தங்களுடைய ஆதரவை தெரிவிக்கும் வகையில் ஈரானில் ஆண்டுதோறும் அல் குத்ஸ் தின பேரணி நடைபெறும். நேற்று குத்ஸ் பேரணி நடைபெறுவதற்கு முன்னர் தலைநகர் டெஹ்ரானில் உள்ள பிர்தோவ்ஸ் சதுக்கத்தில் தாக்குதல் நடத்தப்பட வாய்ப்பு உள்ளதால் அங்கு உள்ள மக்கள் வெளியேற வேண்டும் என்று இஸ்ரேல் ராணுவத்தின் சார்பில் பார்சியில் எச்சரிக்கை வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களில் பிர்தோவ்ஸ் சதுக்கத்தில் பயங்கர குண்டுவெடிப்பு நடந்தது. அதை தொடர்ந்து இஸ்ரேலிய வான்வழி தாக்குதலில் ஒரு பெண் கொல்லப்பட்டார் என்று அரசு செய்தி நிறுவனம் தஸ்னீம் தெரிவித்தது.

துருக்கி மீது தாக்குதல்: துருக்கியை நோக்கி ஏவுகணை தாக்குதல் நடத்தும் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. துருக்கி நேட்டோ அமைப்பில் உள்ளது. நேட்டோ நாட்டு படைகள் அங்கு உள்ளன. மத்திய தரைக்கடலை ஒட்டி உள்ள துருக்கி நாட்டின் துறைமுக நகரான இன்சிர்லிக் விமான தளத்தை நோக்கி ஈரான் நேற்று ஏவுகணை தாக்குதல் நடத்தியது. ஈரானின் ஏவுகணையை இடைமறித்து அழித்து விட்டதாக துருக்கி தெரிவித்துள்ளது. ஈரான் அமைச்சர்-ஜெய்சங்கர் பேச்சு: ஈரானில் போர் தொடங்கிய தினத்தன்று அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் செய்யது அப்பாஸ் அராக்சியுடன் ஒன்றிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பேசினார். அதை தொடர்ந்து மார்ச் 5 மற்றும் 10 ஆகிய தேதிகளிலும் அராக்சியுடன் ஜெய்சங்கர் பேசினார். ஈரான் அருகே உள்ள ஹார்முஸ் ஜலசந்தியில் பல இந்திய வணிக கப்பல்கள் சிக்கி உள்ளன. அதில் ஏராளமான இந்திய கப்பல் பணியாளர்கள் உள்ளனர். இந்திய கப்பல்களை பாதுகாப்பாக கொண்டு வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் நிலையில், ஈரான் அமைச்சருடன் ஜெய்சங்கர் தொலைபேசி வாயிலாக உரையாடியுள்ளார்.

அமெரிக்க ராணுவ தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் படுகாயம்?: கடந்த 28ம் தேதி இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அதனால் அவருக்கு கால்கள் அகற்றப்பட்டிருக்கலாம் என்று சர்வதேச ஊடகங்களில் செய்தி வெளியாயின. இதனை ஈரான் அதிபர் பெசஷ்கியானின் மகன் மறுத்ததோடு மொஜ்தபா பாதுகாப்பாக இருப்பதாக கூறினார். இந்த நிலையில், அமெரிக்க ராணுவ அமைச்சர் பீட் ஹெக்செத் பேட்டியளிக்கையில் மொஜ்தபா படுகாயம் அடைந்துள்ளார். அவரது உடல் உறுப்புகள் சிதைந்துள்ளன என்று தெரிவித்தார்.நாட்டின் தலைவராக பொறுப்பேற்ற பின்னர் நேற்று முன்தினம் முதன் முதலாக மொஜ்தபா அறிக்கை வெளியிட்டார். எழுதப்பட்டிருந்த அறிக்கையில் அமெரிக்காவுக்கு எதிரான போரை தொடர போவதாக அவர் சூளுரைத்திருந்தார்.

ரஷ்ய எண்ணெய் வாங்குவதற்கு மற்ற நாடுகளுக்கும் அனுமதி: கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வரும் நிலையில், ஈரான் மீதான அமெரிக்கப் போர் உடனே முடிவடைவதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லாததால், தற்போது கடலில் சிக்கித் தவிக்கும் ரஷ்ய எண்ணெயை வாங்குவதற்கு டிரம்ப் நிர்வாகம் மற்ற நாடுகளுக்கும் தற்காலிக அங்கீகாரத்தை அளித்துள்ளது. கடந்த மாதம் 28ம் தேதி போர் வெடித்ததிலிருந்து அதிகரித்து வரும் எண்ணெய் விலையை குறைப்பதற்கான முயற்சியின் ஒரு பகுதியாக, ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதற்கு இந்தியாவிற்கு இதேபோன்ற தடைகளில் இருந்து 30 நாள் விலக்கு அளித்திருந்தது.

இந்த நிலையில் மற்ற நாடுகளுக்கும் இதே போன்று அனுமதி அளித்து அமெரிக்கா அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அமெரிக்க கருவூல அமைச்சர் ஸ்காட் பெசென்ட் எக்ஸ் தளத்தில் நேற்று முன்தினம் பதிவிடுகையில்,உலகளாவிய எரிசக்தி சந்தைகளில் ஸ்திரத்தன்மையை மேம்படுத்தவும், ஈரானிய பயங்கரவாத ஆட்சியால் ஏற்படும் அச்சுறுத்தல் மற்றும் உறுதியற்ற தன்மையை நாங்கள் நிவர்த்தி செய்யும் போது விலைகளை குறைவாக வைத்திருக்கவும் அமெரிக்கா தீர்க்கமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. உலகளவில் எண்ணெய் விநியோகத்தை சரி செய்ய தற்போது கடலில் சிக்கியுள்ள கப்பல்களில் இருந்து ரஷ்ய எண்ணெயை வாங்குவதற்கு தற்காலிக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

* ஈரானுக்கு சீனா ரூ.1.84 கோடி உதவி
ஈரானின் மினாப் நகரில் பெண்கள் பள்ளியில் அமெரிக்க படைகள் குண்டு வீசி வான்வழி தாக்குதல் நடத்தியதில் 165 மாணவிகள் பலியாகினர். 100 பேர் படுகாயமடைந்தனர். இந்த நிலையில் சீன வெளியுறவு அமைச்சர் குவோ ஜியாகுன் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், சமீபத்தில் ஈரானில் உள்ள பெண்கள் பள்ளியில் அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலில் மாணவிகள் உயிரிழந்ததற்கு சீனா ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறது. தாக்குதலில் கொல்லப்பட்ட மாணவிகளின் குடும்பத்திற்கு அவசர மனிதாபிமான உதவியாக சீன செஞ்சிலுவை சங்கத்தின் மூலம், ஈரானின் செம்பிறை சங்கத்திற்கு அவசர மனிதாபிமான உதவியாக 2 லட்சம் டாலர்கள் (ரூ.1.84 கோடி) வழங்கப்படும். பொதுமக்கள் மற்றும் ராணுவம் அல்லாத இலக்குகள் மீது நடத்தப்படும் அனைத்து கண்மூடித்தனமான தாக்குதல்களையும் சீனா கண்டிக்கிறது என்று குவோ கூறினார்.

* அமெரிக்க விமானம் விழுந்து நொறுங்கியதில் 6 பேர் பலி
ஈராக் நாட்டில் அமெரிக்க விமானப்படைக்கு சொந்தமான எரிபொருள் நிரப்பும் விமானம் விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்க விமானப்படைக்கு சொந்தமான கே.சி-135 ஸ்டிராடோடாங்கர் என்ற எரிபொருள் நிரப்பும் விமானம் ஈராக்கின் மேற்கு வான்பரப்பில் நேற்று பறந்து கொண்டிருந்தபோது திடீரென விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் விமானி, துணை விமானி உட்பட மொத்தம் 6 வீரர்கள் இருந்தனர். அதில் 6 பேரும் பலியாகியுள்ளனர்.

வழக்கமாக போர் விமானங்களுக்கு நடுவானில் எரிபொருள் நிரப்பும் பணியில் ஈடுபடும் இந்த ரக விமானங்களில், அவசர காலத்தில் தப்பிப்பதற்கான எஜெக்ஷன் சீட் எனப்படும் இருக்கை வசதிகள் கிடையாது. இந்த விபத்தின்போது இரண்டு விமானங்கள் வான்வழியில் ஒன்றாக பயணித்த நிலையில், ஒரு விமானம் விபத்துக்குள்ளாகி சிதறியது. மற்றொரு விமானம் அவசர கால எச்சரிக்கையை விடுத்தபடி இஸ்ரேல் நாட்டின் பென் குரியன் விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியது. இந்த சம்பவம் குறித்து விளக்கம் அளித்துள்ள அமெரிக்க ராணுவ மையம், இந்த விபத்து நட்பு நாடுகளின் வான் எல்லைக்குள் நடந்துள்ளது. இது எதிரிகளின் தாக்குதலோ அல்லது தவறுதலான துப்பாக்கிச் சூடோ கிடையாது என்று தெரிவித்துள்ளது. இந்த விமானத்தை ஈராக்கில் உள்ள தங்களது ஆதரவு படைப்பிரிவினர் சுட்டு வீழ்த்தியதாக ஈரான் அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விபத்து நடந்த இடத்தில் மீட்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

4வது விமானம்: தொடரும் இழப்புகள்
பிப்ரவரி 28 இல் ஈரான் போர் தொடங்கியதிலிருந்து அமெரிக்கா இழக்கும் 4வது ராணுவ விமானம் இதுவாகும். இதற்கு முன்பு, மார்ச் 2 ஆம் தேதி குவைத்தில் அமெரிக்காவின் மூன்று எப்-15 இ ஈகிள் போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. இவை குவைத் நாட்டு விமானப்படை தவறுதலாக நடத்திய தாக்குதலில் நடந்தாக அந்நாடு அறிவித்திருந்தது. எனினும் அதில் இருந்த 6 வீரர்கள் பாதுகாப்பாக வெளியேறினர். அவர்கள் உடல் நிலை நன்றாக தேறி வருகிறது.

Tags : Iran ,US ,Chancellor ,Trump ,DUBAI ,GULF NATIONS ,United States ,
× RELATED அமெரிக்க நீர்மூழ்கி தாக்குதலால்...