×

காலையில் துவங்கி மாலை வரை நீடித்த தூய்மை பணியாளர்கள் போராட்டம்

தூத்துக்குடி, டிச. 17: தூத்துக்குடி மாநகர பகுதியில் அவர்லேண்ட் என்ற தனியார் நிறுவனம் மூலம் தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் ஏராளமான பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் தொழிற்சங்கத்திலும் அங்கம் வகித்து வருகின்றனர். இந்நிலையில் தூய்மைப்பணியாளர் சங்க நிர்வாகியும், ஏஐசிசிடியு மாவட்ட தலைவருமான பொன்ராஜ் என்பவர் சமீபத்தில் நடந்த மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி மாநாட்டில் பங்கேற்றுள்ளார். முறையாக தகவல் தெரிவிக்காமல் அவர் சென்றதால், தனியார் நிறுவனம் அவரை பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்துள்ளது.

இதையறிந்த தூய்மை பணியாளர்கள் நேற்று காலை பணியை பாதியில் முடித்துக் கொண்டு தூத்துக்குடி சிதம்பரநகரில் உள்ள தனியார் நிறுவன அலுவலகம் முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் குப்பை சேகரிக்கும் வண்டிகளை மாநகராட்சி வளாகத்தில் நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனாலும் தனியார் நிறுவனம் கண்டுகொள்ளாததால் மாலை வரை போராட்டம் நீடித்தது. குப்பைகளுடன் வண்டிகள் அனைத்தும் மாநகராட்சி வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்ததால் அப்பகுதி முழுவதும்துர்நாற்றம் வீசியது.

இந்த போராட்டத்தில் ஏஐசிசிடியு மாநில துணை தலைவர் சகாயம், மாவட்ட தலைவர் அம்ஜத், முருகன், சிவராமன், பாலமுருகபெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டவரை பணியில் சேர்க்க தனியார் நிறுவனத்துடன் பேசுவதாக உறுதியளித்தார். அதன் பேரில் மாலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Tags : Thoothukudi ,Ourland ,
× RELATED சிறுமிக்கு பாலியல் தொந்தரவு ெகாடுத்த...