ஒட்டன்சத்திரம், டிச. 15: ஒட்டன்சத்திரம் தாலுகாவுக்குட்பட்ட போடுவார்பட்டியை சேர்ந்தவர் செல்வராஜ் (60) விவசாயி. இவருடைய நிலத்தில் மக்காச்சோளம் பயிரிட்டு செய்து தற்போது அறுவடை செய்யும் நிலையில் உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் இவரது நிலத்திற்குள் புகுந்த காட்டுப்பன்றிகள் சுமார் ரூ.1 லட்சம் மதிப்புள்ள மக்காச்சோள பயிர்களை சேதப்படுத்தி நாசம் செய்தது. போடுவார்பட்டி, சத்திரப்பட்டி, மஞ்சநாயக்கன்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் வனத்துறை கட்டுப்பாட்டிள் உள்ள பகுதியிலேயே அதிகளவில் விளை நிலங்கள் உள்ளன.
இதனால் இப்பகுதிகளில் உள்ள விளை நிலங்களில் அடிக்கடி புகும் வனவிலங்குகள் பயிர்களை சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் மிகுந்த கவலையடைந்து உள்ளனர். எனவே வனத்துறையினர் விளை நிலங்களுக்குள் வனவிலங்குகள் புகுவதை கட்டுப்படுத்துவதுடன், சேதமடைந்த மக்காச்சோள பயிர்களுக்கு இழப்பீடு பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
