×

செய்யூர் அருகே பரபரப்பு: டாஸ்மாக் மேலாளரை வெட்டி 7.80 லட்சம் கொள்ளை: மர்மநபர்களுக்கு வலை

செய்யூர்: செங்கல்பட்டு மாவட்டம் பவுஞ்சூர் அடுத்த பாலூர் கிராமத்தில் டாஸ்மாக் கடை உள்ளது. இங்கு இரும்பேடு கிராமத்தை சேர்ந்த சுரேஷ்குமார் (45) மேலாளராகவும், உதவியாளராக சங்கர் (38) ஆகியோர் பணியாற்றுகின்றனர். இந்த கடையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மது விற்பனை அதிகமாக நடந்துள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சுரேஷ்குமார், சங்கர் ஆகியோர் வியாபாரம் முடிந்ததும், கடையை பூட்டிவிட்டு விற்பனையான ₹7.8 லட்சத்துடன், பைக்கில் வீட்டுக்கு புறப்பட்டனர். அம்மனூர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, அவர்களை பின் தொடர்ந்து, 2 பைக்குகளில் வந்த 4 பேர், சுரேஷ்குமாரின் பைக்கை மறித்தனர். இதை கண்ட அவர்கள், தப்பிக்க முயன்றனர்.ஆனால், மர்மநபர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் 2 பேரையும் சரமாரியாக வெட்டிவிட்டு, அவர்களிடம் இருந்த ₹7.8 லட்சத்தை பறித்து கொண்டு தப்பினர்.

அந்த நேரத்தில், அவ்வழியாக சென்ற பொதுமக்கள், ரத்த வெள்ளத்தில் கிடந்த 2 பேரையும் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.தகவலறிந்து செய்யூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, ரத்த வெள்ளத்தில் கிடந்த சுரேஷ்குமார், சங்கர் ஆகியோரை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ₹7.8 லட்சத்தை பறித்து கொண்டு தப்பியோடிய மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags : robbery ,manager ,Tasmac ,
× RELATED திண்டுக்கல் அருகே பட்டப்பகலில் கொள்ளை