மவுன்ட் வெர்னான்: வாஷிங்டன்னில் தொடர் கனமழையால் வௌ்ளம் ஏற்பட்டுள்ள நிலையில், அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவின் வடமேற்கு பகுதியில் கடந்த சில தினங்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் வாஷிங்டன் மாகாணம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மாகாணத்தில் உள்ள பெரும்பாலான பகுதிகள் வௌ்ளத்தில் தத்தளிக்கின்றன. சாலைகள் அடித்து செல்லப்பட்டு, வீடுகள் நீரில் மூழ்கி கிடக்கின்றன. வௌ்ளம் காரணமாக சில வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. மேலும் பல வீடுகள் அடித்து செல்லப்பட்டுள்ளன.
மேலும் வாஷிங்டன் மாகணத்தின் சியாட்டில் பாயும் ஸ்காகிட் ஆற்றில் அபாய அளவை தாண்டி வௌ்ளம் ஓடுவதால் விவாசய பகுதிகளில் வசிக்கும் 78,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வௌியேற்றப்பட்டுள்ளனர். இதனால் அங்கு உள்ளூர் அவசர நிலை பிரகடனம் பிறப்பித்து கவர்னர் பாப் பெர்குசன் உத்தரவிட்டுள்ளார். இதேபோல், ஸ்னோஹோமிஷ் ஆற்றில் வௌ்ளம் பாய்வதால் ஆற்றின் குறுக்கே உள்ள பாலம் சேதமடைந்துள்ளது. அமெரிக்கா கனடா எல்லைக்கு அருகில் வடக்கில் உள்ள சுமாஸ், நூக்சாக் மற்றும் எவர்சன் நகரங்கள் வௌ்ளத்தில் சிக்கி உள்ளன. கனமழை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
