டோக்கியோ: ஜப்பானில், சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக கடந்த திங்கட்கிழமை ஜப்பானில் 7.6 ரிக்டர் அளவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் சுமார் 40க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். கிழக்காசிய நாடான ஜப்பானின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் உள்ள ஹோக்கைடோ, அமோரி, தோஹோகு ஆகிய பகுதிகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் கடல் பகுதியில், இந்திய நேரப்படி இரவு 2.44 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.
20 கிமீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில், 6.7ஆக பதிவாகி உள்ளது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இதை நிலநடுக்கத்தை தொடர்ந்து 4.5 முதல் 5.7 வரையிலான ரிக்டர் அளவில் 3 சிறிய நில அதிர்வுகளும் ஏற்பட்டன. இதைத் தொடர்ந்து ஒரு மீட்டர் உயரம் வரை கடல் அலைகள் எழும்பலாம் என்ற சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கின. இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர். நில அதிர்வுகளால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் உயிர்ச் சேதங்கள் குறித்த முழுமையான தகவல்கள் இதுவரை எதுவும் வெளியாகவில்லை. நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
