- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- சென்னை
- வள்ளலார்
- அமைச்சர்
- பி.கே.சேகர்பாபு
- பெரம்பூர்
- கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
- கொளத்தூர், சென்னை
- பூம்புகார் நகர்
- ராஜாஜி நகர்
பெரம்பூர்: சென்னை கொளத்தூர் பூம்புகார் நகரில் நடைபெற்றுவரும் கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் கட்டுமான பணிகளையும் ராஜாஜி நகரில் கட்டப்பட்டுவரும் மூத்த குடிமக்கள் உறைவிடம் கட்டுமான பணிகளையும் அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று காலை ஆய்வு செய்தார். இதன்பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது; கபாலீஸ்வரர் திருக்கோயில் சார்பில் கலைக்கல்லூரி கட்டப்பட்டு வருகிறது. இந்த கல்லூரியை சேர்ந்த ஆயிரம் பிள்ளைகள் கொளத்தூரில் உள்ள தற்காலிக கட்டிடத்தில் பயின்று வருகிறார்கள். அவர்களுக்கு நிரந்தர கட்டிடத்தை கட்டி வருகிறோம். இந்த பணிகள் விரைவில் முடிவுற்று ஜனவரி மாதம் இறுதியில் மாணவ, மாணவிகளின் பயன்பாட்டிற்கு வரும்.
கொளத்தூர் ராஜாஜி நகரில் கட்டப்பட்டுவரும் மூத்த குடிமக்கள் உறைவிடம் கட்டுமான பணிகளையும் ஆய்வு மேற்கொண்டோம். அந்த பணிகளும் அடுத்தாண்டு ஜனவரி மாதம் இறுதிக்குள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். வள்ளலாருக்கு உலகளவில் பெரிய மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பிப்ரவரி முதல் வாரம் சென்னையில் நடைபெறும் அந்த மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். கீழ்பாக்கம் ஏகாம்பரநாதர் திருக்கோயிலுக்கு சொந்தமான இடத்தில் நடைபெறும் மாநாட்டில் 10 ஆயிரம் பக்தர்கள் கலந்து கொள்ள உள்ளனர். வள்ளலார் மாநாட்டிற்கு பெரும்பாலான நபர்கள் ஆதரவு அளித்து வருகிறார்கள். போட்டி போட்டுக்கொண்டு கலந்து கொள்பவர்களின் பட்டியல் நீண்டுகொண்டே உள்ளது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு வள்ளலார் தொடர்பான புதிய அறிவிப்புகளை வெளியிடுவார். இவ்வாறு கூறினார்.
புதுச்சேரிக்கு சென்று திமுக அரசை தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் குற்றம் சாட்டியுள்ளாரே என்ற கேள்விக்கு அமைச்சர் அளித்த பதிலில், ‘’சொல்றவர் சரி இல்லை என நான் சொல்வேன்’ என்றார். தைலாபுரத்தை திமுக டேக்ஓவர் செய்துவிட்டதாக அன்புமணி குற்றச்சாட்டு குறித்தான கேள்விக்கு, ‘’இந்த உலகத்திற்கு உயிர் கொடுத்து தன்னை அறிமுகப்படுத்திய நபரையே முழுமையான திருப்திகரமாக வைத்துக் கொள்ளாத சொற்களுக்கு எல்லாம் பதில் சொல்வதற்கு உண்டான தகுதி உடையவர்கள் அல்ல என்பது எனது கருத்து’ என்றார். பாமக பிரிவுக்கு திமுக தான் காரணம் என அன்புமணி குற்றம்சாட்டியுள்ளாரே என்ற கேள்விக்கு அமைச்சர், ‘’தந்தையார் கூற்றைப் பாருங்கள், அவரது தந்தையாரே கைக்கூலி என்ற பட்டத்தை அவருக்கு வழங்கி இருக்கிறார். அதனால் வேறு யாருக்கும் அவர் அந்த பட்டத்தை வழங்க தகுதி இல்லை’’ என்றார்.
