×

யானைகள் இடமாற்றத்திற்கு வழிகாட்டு நெறிமுறை உருவாக்க 6 பேர் நிபுணர் குழு அமைப்பு: 2 காட்டு யானைகள் உயிரிழப்பால் தமிழக அரசு நடவடிக்கை

 

சென்னை: தமிழக சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை செயலாளர் சுப்ரியா சாகு வெளியிட்ட அறிக்கை: சில மாதங்களில், 2 காட்டு யானைகள் இடமாற்றம் செய்யப்பட்டபோது உயிரிழந்ததன் மூலம் தற்போதுள்ள வழிகாட்டு நெறிமுறைகளில் மாற்றம் செய்யப்பட வேண்டிய நிலை எழுந்துள்ளது. இந்த சம்பவங்கள், காட்டு விலங்குகளை, குறிப்பாக யானைகளை பிடித்தல், கையாளுதல், இடமாற்றம் செய்தல், விடுவித்தல் மற்றும் விடுவித்த பிறகு கண்காணித்தல் பற்றிய நடைமுறைகள் பற்றிய விரிவான, அறிவியல் அடிப்படையிலான மதிப்பாய்வின் அவசியத்தை அடிக்கோடிட்டு காட்டுகின்றன.

யானை இடமாற்ற நடைமுறைகளில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்ய வன விலங்குகளை பிடிப்பது, இடமாற்றம் செய்வது மற்றும் விடுவிப்பது குறித்த தெளிவான நெறிமுறைகளை வகுக்க வேண்டியது அவசியம். யானைகளை இடமாற்றம் செய்வது பற்றிய தெளிவான நடைமுறைகளை வகுக்க மாநில அளவிலான நிபுணர் குழுவை அரசு அமைத்துள்ளது.

இந்த குழுவின் தலைவராக அ.உதயன் (முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் (ம) இயக்குநர், உயர்நிலை வன உயிரின பாதுகாப்பு நிறுவனம், சென்னை) இடம் பெற்றிருப்பார். உறுப்பினர்களாக அனுராக் மிஷ்ரா (முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் (ம) சிறப்பு செயலாளர் (சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம்), என்.வெங்கடேஷ் பிரபு (மாவட்ட வன அலுவலர், கூடலூர், நீலகிரி), டாக்டர் கே.கலைவாணன் (வன கால்நடை மருத்துவ அலுவலர், ஸ்ரீவில்லிப்புத்தூர் மேகமலை புலிகள் காப்பகம்), டாக்டர் ராஜேஷ் (வன கால்நடை உதவி அறுவை சிகிச்சை நிபுணர் முதுமலை புலிகள் காப்பகம்), டாக்டர் என்.பாஸ்கரன் (உதவி பேராசிரியர், ஏ.வி.சி. கல்லூரி, மயிலாடுதுறை) ஆகிய 5 பேர் உறுப்பினர்களாக இடம் பெறுவார்கள்.  தேவைக்கேற்ப, நிறுவனங்கள், நடத்தை சூழலியல் வல்லுநர்கள் மற்றும் ஜிஐஎஸ் நிபுணர்களை கூடுதல் கள நிபுணர்களாக குழு நியமித்துக்கொள்ளலாம்.

குழுவின் குறிப்பு மற்றும் விதிமுறைகள்:

* இடமாற்றம் செய்யப்பட்ட யானைகளின் இறப்பு தொடர்பான சமீபத்திய நிகழ்வுகளின் மதிப்பீடு மற்றும் மதிப்பாய்வு.

* தேசிய மற்றும் உலகளாவிய அறிவியல் வழிகாட்டுதல்களுடன் தொடர்பான தற்போதைய நெறிமுறைகளை மதிப்பீடு செய்தல் மற்றும் வலுப்படுத்த வேண்டிய பகுதிகளை அடையாளம் காணுதல்.

* வன விலங்குகளை, குறிப்பாக யானைகளை பிடிப்பது, இடமாற்றம் செய்வது மற்றும் விடுவிப்பதற்கான விரிவான, செயல்படுத்தக்கூடிய நிலையான வழிகாட்டு நடைமுறை உருவாக்குதல்.

* நிலையான வழிகாட்டு நடைமுறை இந்தியாவிற்கு ஒரு தேசிய மாதிரியாக கருதப்படுவதற்கு ஏற்ற தரநிலையாக இருப்பதை உறுதி செய்தல். இந்த குழு 2 மாதங்களுக்குள் அறிக்கையையும், நிலையான வழிகாட்டு நடைமுறையையும் அரசுக்கு சமர்ப்பிக்கும்.

 

Tags : Tamil Nadu government ,Chennai ,Tamil Nadu Environment, Climate Change and Forests ,Supriya Sagu ,
× RELATED திருப்பரங்குன்றம் விவகாரம்: கலவரம்...