×

கர்நாடகாவுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவு: காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு 7.35 டிஎம்சி நீரை திறக்க வேண்டும்

 

சென்னை: டெல்லியில் காவிரி நீர் மேலாண்மை ஆணைய 46வது கூட்டம் தலைவர் எஸ்.கே.ஹல்தார் தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில் தமிழ்நாடு உறுப்பினர் மற்றும் நீர்வளத்துறை செயலாளர் ஜெயகாந்தன் மற்றும் காவிரி தொழில்நுட்பக் குழுமம் மற்றும் பன்மாநில நதிநீர்ப் பிரிவு தலைவர் சுப்பிரமணியன் சென்னை தலைமை செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக கலந்து கொண்டனர்.

இதில், காவிரி டெல்டா மாவட்டங்களில் நவம்பர் கடைசி வாரத்திலும் மற்றும் டிசம்பர் முதல் வாரத்திலும் டிட்வா புயலினால் பெய்த கன மழை காரணமாக பயிர்சேதம் ஏற்பட்டுள்ளதால், சேத பரப்பளவின் கணக்கெடுப்பு பணி நடக்கிறது. கர்நாடக அணைகளின் நீர் இருப்பு மற்றும் நீர்வரத்து கணிசமான அளவு தொடர்ந்து வருவதினாலும், தமிழகத்திற்கு டிசம்பர் மாதத்திற்கு வழங்கப்பட வேண்டிய நீர் அளவான 7.35 டி.எம்.சி, நீரினை உச்ச நீதிமன்ற ஆணையின்படி கர்நாடகம் பில்லிகுண்டுலுவில் திறக்க கர்நாடகாவிற்கு ஆணையம் வலியுறுத்த வேண்டும். கர்நாடகம், தொடர்ந்து காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பிலும் மற்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்பிலும் அங்கீகரிக்கப்படாத நீரேற்று பாசன திட்டங்களை செயல்படுத்தி சாகுபடி செய்வதை தடுக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆணையம் இத்திட்ட விவரங்களை பெற வேண்டும் என தமிழ்நாடு சார்பில் வேண்டுகோள் விடுத்தனர்.

அதை தொடர்ந்து தமிழ்நாடு பெற வேண்டிய குறைந்தபட்ச நீர் அளவான 7.35 டிஎம்சி தண்ணீர் திறக்கப்பட வேண்டும் என கர்நாடகாவுக்கு உத்தரவு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும் கூட்டத்தில் தமிழ்நாடு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் கர்நாடகாவின் திட்டமான மேகதாது அணை திட்டம் குறித்து எந்த விவாதமும் நடைபெறவில்லை என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Tags : Cauvery Water Management Authority ,Karnataka ,Cauvery ,Tamil Nadu ,Chennai ,Delhi ,S.K. Haldar ,Water Resources Secretary ,Jayakanthan ,Cauvery Technical Group ,Inter-State River Water Division ,Chairman… ,
× RELATED திருப்பரங்குன்றம் விவகாரம்: கலவரம்...