×

கொடிநாள் வசூல் துவக்கம் 24 பேருக்கு ரூ.7 லட்சம் நலத்திட்ட உதவிகள்

* கலெக்டர் வழங்கினார்

திருவாரூர் : திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கொடிநாள் வசூலை கலெக்டர் மோகனசந்திரன் துவங்கி வைத்து 24 பயனாளிகளுக்கு ரூ.7 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.திருவாரூர் மாவட்ட முன்னாள் படைவீரர்கள் நலத்துறையின் சார்பில் படைவீரர்கள் கொடிநாள் தினத்தை முன்னிட்டு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நலத்திட்டம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் 24 முன்னாள் படைவீரர்களுக்கு கல்வி உதவித்தொகை, கண்கண்ணாடி நிதியுதவி, ஈமச்சடங்கு நிதியுதவி, வீட்டு வரிச்சலுகை மற்றும் முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தின் கீழ் மூலதன மானியம், முன்னாள் படைவீரர் மகளின் திருமணத்திற்காக 8 கிராம் தங்க நாணயமும் என மொத்தம் ரூ.7 லட்சத்து 1 ஆயிரத்து 137 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் மோகனச்சந்திரன் வழங்கினார்.

இது குறித்து அவர் பேசும் போது, முப்படைகளிலும் பணியாற்றி நமது தாயகத்தை காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள படைவீரர்கள் தாய்த்திரு நாட்டினை காத்திட, தங்கள் வாழ்க்கையையே அர்பணித்து, தன்னலமின்றி, தன்னுயிரையும் துச்சமென துறந்த நம் முப்படை வீரர்களின் சேவையை நினைவு கூறவும், நம் தேசத்தை காத்திட எண்ணற்ற இன்னல்களுக்கிடையே அஞ்சாமல் கண் தூங்காமல் அரும்பணியாற்றி வரும் முப்படைவீரர்களின் கடமையினை போற்றிடும் வகையிலும் ஆண்டுதோறும் டிசம்பர் 7ம் நாளன்று படைவீரர் கொடிநாள் அனுசரிக்கப்படுகிறது.

படைவீரர் கொடிநாள் கொண்டாடப்படும் டிசம்பர் 7ம் நாளன்று கொடிநாள் நிதி வசூல் துவக்கப்பட்டு அரசால் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, அந்த இலக்குத் தொகை அனைத்து துறை அலுவலர்களின் ஒத்துழைப்போடும் எய்தப்பட்டு வருகிறது.

படைவீரர் கொடிநாள் நிதியாக வசூலிக்கப்படும் தொகையிலிருந்து தான் முன்னாள் படைவீரர் மற்றும் அவர்களை சார்ந்தோரது நலனுக்கென மத்திய மற்றும் மாநில அரசுகளால் அறிவிக்கப்படும் பல்வேறு நலத்திட்டங்களின் கீழ் நிதியுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி, இவ்வாண்டு தமிழ்நாடு முன்னாள் படைவீரர் நல நிதியிலிருந்து மாவட்டத்தில் 127 பயனாளிகளுக்கு திருமண நிதியுதவி, ஈமச்சடங்கு நிதியுதவி, மாதாந்திர நிதியுதவி, கண்பார்வையற்றோர் நிதியுதவி, பக்கவாத நிதியுதவி, மனவளர்ச்சி குன்றிய சிறார்களுக்கான நிதியுதவி, புற்றுநோய் நிதியுதவி, ஊனமுற்ற முன்னாள் படைவீரரின் சிறார்களுக்கான நிதியுதவி, கண்கண்ணாடி நிதியுதவி, வீட்டுவரி சலுகை மற்றும் இரண்டாம் உலகப்போரில் பணிபுரிந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர்களுக்கு நிதியுதவியாக ரூ.38 லட்சத்து 13 ஆயிரத்து 701 வழங்கப்பட்டுள்ளது.

மேலும் தொகுப்பு நிதியிலிருந்து 53 பயனாளிகளுக்கு வருடாந்திர பராமரிப்பு மானியம், கல்வி உதவித் தொகை மற்றும் வங்கிக்கடன் வட்டி மானியமாக ரூ.13 லட்சத்து ஆயிரத்து 968 வழங்கப்பட்டுள்ளது.

2024-25ம் ஆண்டில் மத்திய இராணுவ நலநிதி டில்லிக்கு கல்வி உதவித்தொகை பெற 68 முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கும் மற்றும் திருமண நிதியுதவிக்கு 10 நபர்களுக்கும் பரிந்துரை செய்யப்பட்டு உதவித்தொகை பெற்றுள்ளனர்.

திருவாரூர் மாவட்டத்திலுள்ள பல்வேறு துறைகளைச் சேர்ந்த மாவட்ட அலுவலர்களின் சீரிய ஒத்துழைப்புடன் நடந்து முடிந்த கொடிநாள் 2024ல் அரசு இலக்கான ரூ.86 லட்சத்து 42 ஆயிரத்தை கடந்து கூடுதலாக ஒரு லட்சத்து 345 என மொத்தம் ரூ.87 லட்சத்து 42 ஆயிரத்து 345- வசூல் செய்யப்பட்டுள்ளது.

இதற்கு சீரிய ஒத்துழைப்பினை நல்கிய பல்வேறு துறைகளைச் சார்ந்த அரசு அலுவலர்களுக்கு பாராட்டுகளையும் நன்றியினையும் தெரிவித்துக்கொள்வதுடன், வருகின்ற படைவீரர் கொடிநாள் 2025-ம் ஆண்டிற்கு அதிக வசூல் புரிந்து இம்மாவட்டத்திற்கு பெருமை சேர்த்திடும் வகையில் கொடிநாள் நிதிக்கு திருவாரூர் மாவட்ட மக்கள் அனைவரும் தாராளமாக நிதியினை வாரி வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இந்த கொடிநாள் நிதியினை இணையவழி மூலமும் செலுத்தலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.முன்னதாக, படைவீரர் கொடிநாள் முன்னிட்டு கலெக்டர் மோகனசந்திரன் மற்றும் எஸ்.பி கருண்கரட் ஆகியோர் உண்டியலில் பணம் செலுத்தி படைவீரர் கொடிநாள் நிதி வசூலினை துவக்கி வைத்தனர்.

நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுகப்பிரியா, மாவட்ட முன்னாள் படைவீரர் நல கண்காணிப்பாளர் துர்கா, தேசிய மாணவர் படை முதன்மை அதிகாரி சதீஷ்குமார், 2ம் நிலை அலுவலர் சங்கீதா மற்றும் தேசிய மாணவர் படை மாணவர்கள் கலந்துகொண்டனர்.

Tags : Flag Day Collection ,Thiruvarur ,Collector ,Mohanachandran ,Thiruvarur Collector's Office ,Thiruvarur District Veterans Welfare Department ,
× RELATED கோவை கலெக்டர் ஆபீசுக்கு மீண்டும்...