×

சுற்றுலாத்தலம் ஆனது சுட்டிநெல்லிபட்டி வறண்ட கண்மாய்க்கு தண்ணீர் வந்தாச்சு ஓவர் நைட்டில் டூரிஸ்ட் ஸ்பாட் ஆயாச்சு

*வடை, பஜ்ஜி கடைகளுடன் தினமும் திருவிழா கோலம்

காரைக்குடி : காரைக்குடி அருகே சுட்டிநெல்லிபட்டியில் உள்ள கண்மாய் திடீரென சுற்றுலாத்தலமாக மாறியுள்ளது.சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ளது சுட்டிநெல்லிபட்டி கிராமம்.

இக்கிராமத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 300 ஏக்கர் பரப்பளவு கொண்ட சாய கண்மாய் உள்ளது. இதனை நம்பி ஏராளமான ஏக்கர் விவசாய நிலங்கள் பயனடைந்து வருகின்றன. காரைக்குடி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள கண்மாய்கள் மழையால் நிறையும் போது, அந்த தண்ணீர் வெளியேறி சாய கண்மாயை வந்தடைகிறது.

காரைக்குடி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்மழை பெய்து வருகிறது. இதனால் சாய கண்மாய் நிறைந்து 18 கண் கலுங்கு வழியாக தண்ணீர் வெளியேறி வருகிறது. கலுங்கு பகுதியில் இருந்து தண்ணீர், படிக்கட்டுகள் போன்று அமைக்கப்பட்டுள்ள இடத்தில் அழகாக வெளியேறுகிறது.

இதில் உற்சாகமாக குளித்து வரும் உள்ளூர் இளைஞர்கள் ரீல்ஸ் எடுத்து வீடியோ வெளியிட்டனர். இந்த வீடியோ வைரலானதால் தற்போது காரைக்குடி, மாத்தூர், இலுப்பக்குடி, சாக்கோட்டை, புதுவயல் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் குடும்பம் குடும்பமாக கண்மாய்க்கு வந்து குதூகலமாக குளித்து மகிழ்கின்றனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நிறைந்து கிடக்கும் தண்ணீரில் மகிழ்ச்சியாக ஆட்டம் போட்டு வருகின்றனர்.

ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களில் மக்கள் கூட்டம் அதிகம் வருவதால், இவர்களை குறி வைத்து புதுப்புது கடைகளும் முளைத்து வருகின்றன. இதனால் உள்ளூர் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.கிராம மக்கள் கூறுகையில், ‘‘மழை காரணமாக கண்மாய் தண்ணீர் நிறைந்து வெளியேறி வருகிறது. மற்ற கண்மாய்களை போல் இல்லாமல், இங்குள்ள கண்மாயில் தண்ணீர் வெளியேறும் இடத்தில் அடுக்கடுக்காக அழகாக படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதில் தண்ணீர் வெளியேறுவதை பார்ப்பதே அழகாக இருக்கும். இதனால் சுற்றுவட்டாரங்களில் உள்ள மக்கள் குடும்பத்துடன் படையெடுத்து வருகின்றனர். காலை முதல் மாலை வரை தொடர்ந்து மக்கள் வருகின்றனர்.

மக்கள் வருகை அதிகமாக உள்ளதை தொடர்ந்து இப்பகுதியில் டீ, வடை, பஜ்ஜி கடைகள் உருவாகி உள்ளன. இதனால் உள்ளூர் மக்களுக்கு வருமானம் வருகிறது. வெயில் காலத்தில் வறண்டு வெறிச்சோடி காணப்பட்ட இடம், தற்போது மக்கள் கூட்டத்தால் விழாக்கோலம் பூண்டுள்ளதை பார்க்கும்போது உற்சாகமாக உள்ளது’’ என்றனர்.

Tags : Aayachu ,Kolam Karaikudi ,Suttinellibar ,Karaikudi ,Chivaganga District ,Suttinellipathi Village ,
× RELATED திருமயம் பகுதியில் நீரில் மூழ்கிய...