திருப்புத்தூர்: மதுரை, திருப்பரங்குன்றம் மலை மீது வழக்கத்திற்காக மாறாக தர்கா அருகே உள்ள சர்வே கல்லில் கார்த்திகை தீபம் ஏற்றும்படி பாஜ, இந்து அமைப்பினர் பிரச்னை செய்து வருகின்றனர். பாஜ முன்னாள் தேசியச் செயலாளர் எச்.ராஜா இதற்கு ஆதரவான போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக கடந்த 4ம் தேதி திருப்பரங்குன்றம் செல்ல, சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூர் அருகே கும்மங்குடி பகுதியில் இருந்து புறப்பட்டார். அவரை திருப்புத்தூர் டிஎஸ்பி செல்வக்குமார் தலைமையிலான போலீசார் தடுத்து நிறுத்தினர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த எச்.ராஜா, தான் நடித்துக் கொண்டிருக்கும் திரைப்படத்திற்கு டப்பிங் பேசுவதற்காக சென்று கொண்டிருப்பதாகவும், தன்னை விடுவிக்குமாறும் கூறினார். ஆனால் போலீசார், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுத்து நிறுத்துவதாக கூறினர். அப்போது போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட எச்.ராஜா, தமிழக அரசு, அமைச்சர்கள், மதுரை கலெக்டர், காவல் ஆணையர் ஆகியோரை கடுமையாக விமர்சித்து பேசினார்.
இதையடுத்து, எச்.ராஜா மற்றும் அவரது ஓட்டுநர் மீது பொதுவழி பாதையை மறித்து பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு செய்தல், போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்தல், மதவாதத்தை தூண்டுவது போல பேசுதல் ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் நேற்று முன்தினம் இரவு நாச்சியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
