திருவண்ணாமலை: திமுக இளைஞர் அணியின் வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு வரும் 14ம் தேதி மாலை 4 மணிக்கு திருவண்ணாமலை கலைஞர் திடலில் நடக்கிறது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்.இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் திருவண்ணாமலை மாவட்ட திமுக அலுவலகத்தில் நேற்று நடந்தது. பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு வரவேற்றார். கூட்டத்தில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு, நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்துவது குறித்து ஆலோசனைகள் வழங்கி பேசினார்.
பின்னர், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அளித்த பேட்டி: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுபடி திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியை மண்டலம் வாரியாக நடத்த திட்டமிட்டிருக்கிறோம். கட்சி நிர்வாக அளவில் 73 மாவட்டங்கள் உள்ளன. அதில், ஏற்கனவே மாவட்டம், ஒன்றியம் அளவில் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இளைஞர்கள் தங்களை திமுகவில் இணைத்துக்கொள்ள ஆர்வமாக வருகின்றனர். எனவே, வார்டு, கிளைக்கழகம் அளவில் இளைஞர் அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்களை நியமித்து வருகிறோம். அதற்கான அறிவிப்புகளும் வெளியாகி வருகிறது.
ஒரு தொகுதிக்கு சராசரியாக 1300 முதல் 1400 நிர்வாகிகள் நியமிக்கப்படுகின்றனர். அதன்படி, இளைஞர் அணியில் மட்டும் 5 லட்சம் நிர்வாகிகள் நியமிக்கப்பட உள்ளனர். இந்தியாவில் வேறு எந்த இயக்கத்திலும், அணியிலும் இல்லாத அளவில் திமுக இளைஞர் அணியில் 5 லட்சம் நிர்வாகிகள் நியமிக்கிற நிலை உள்ளது. முதற்கட்டமாக, வடக்கு மண்டலத்தில் உள்ள 91 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட நிர்வாகிகள் சந்திப்பில், 1.30 லட்சம் நிர்வாகிகள் வர உள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
* வாக்கு திருட்டு மட்டுமல்ல கட்சி திருட்டிலும் ஈடுபடும் பாஜ: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
செஞ்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாக முகவர்கள் கிளைச் செயலாளர் ஆலோசனை கூட்டம் ஊரணி தாங்கலில் தனியார் திருமண மண்டபத்தில் நேற்று மாலை நடந்தது. இதில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகையில், ‘பாஜவுடன் கூட்டணி வைத்த எந்த கட்சியும் உருப்பட்டதில்லை. பாஜகவின் கிளை அமைப்பாக அமித்ஷா திராவிட முன்னேற்ற கழகமாக அதிமுக மாறிவிட்டது. அதிமுக தலைவர்களான பழனிசாமி, செங்கோட்டையன் ஆகியோர் அமித்ஷாவை சந்தித்தார்கள். ஓ.பன்னீர் செல்வமும் அமித்ஷாவை சந்தித்துள்ளார். அவரின் திட்டம் என்ன என்று தெரியவில்லை. பாஜ வாக்கு திருட்டில் மட்டுமல்ல, கட்சி திருட்டிலும் ஈடுபட்டுள்ளது’ என்றார்.
