×

திருச்சூர் சிறை முன் காவலர்களை தாக்கிவிட்டு தப்பிய ரவுடியை பிடிக்க சென்று மலையில் சிக்கிய போலீஸ்: 10 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்பு: கடையம் அருகே பரபரப்பு

 

கடையம்: போலீசாரை தாக்கிவிட்டு தப்பிய பிரபல ரவுடியை பிடிக்க மலைக்குன்றின் மீது ஏறிய 5 காவலர்கள் இறங்க முடியாமல் தவித்தனர். 10 மணி நேர போராட்டத்திற்கு பிறகு அவர்களை தீயணைப்பு வீரர்கள், போலீசார் மீட்டனர். தென்காசி மாவட்டம் கடையம் அடுத்துள்ள கல்யாணிபுரத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி பாலமுருகன் (35). இவர் மீது கொலை, கொள்ளை, வழிப்பறி என தமிழ்நாடு, கேரள காவல்துறையில் 80க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

கேரள மாநிலம் திருச்சூர் பகுதியில் திருட்டு வழக்கில் சிக்கி அங்குள்ள சிறையில் உள்ளார். கடந்த நவ.3ம் தேதி திருட்டு வழக்கில் அருப்புக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு, மீண்டும் திருச்சூர் சிறையில் அடைக்க 4ம் தேதி தமிழக போலீசார் சென்றுபோது, அவர்களை சிறை வாசலில் தாக்கிவிட்டு பாலமுருகன் தப்பினார். இந்நிலையில், கடையம் ராமநதி அணை செல்லும் வழியில் உள்ள சுமார் 1000 அடி உயரமுள்ள மலைக்குன்றில் மனைவியுடன் பாலமுருகன் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது.

உடனே போலீசார் சுமார் 50க்கும் மேற்பட்டோர் மலைப்பகுதியை சுற்றி வளைத்தனர். அப்போது பலத்த மழை பெய்ததாலும், இருட்டத் தொடங்கியதாலும் பாலமுருகனை தேடும்பணியில் தொய்வு ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை சுமார் 5 மணி அளவில் பாறையின் செங்குத்தான பகுதியில் 5 காவலர்கள் ஏறினர். சுமார் 1000 அடிக்கு மேல் உயரத்திற்கு சென்றபின், அவர்களால் மேலே ஏற முடியாமலும், கீழே இறங்க முடியாமலும் சிக்கி தவித்தனர்.

தகவலறிந்து வந்த சுமார் 50க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சுமார் 10 மணி நேர போராடிய நேற்று அதிகாலை 3 மணிக்கு 3 போலீசார் பத்திரமாக மீட்கப்பட்டனர். லேசான மழை பெய்ததால் காலை 6:30 மணிக்கு மற்ற இருவரும் மீட்கப்பட்டனர். இதனிடையே மலைப்பகுதியில் மனைவி ஜோஸ்வினாவுடன் பதுங்கிய பாலமுருகனை டிரோன் கேமரா மூலம் டிஎஸ்பி தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் தேடி வருகின்றனர்.

Tags : Thrissur ,Kadayam ,Tenkasi district… ,
× RELATED சென்னை விமான நிலையத்தில் இன்று...