×

கேண்டிடேட்ஸ் போட்டியில் ஆட பிரக்ஞானந்தாவுக்கு பிரகாசமான வாய்ப்பு

 

லண்டன்: லண்டன் செஸ் கிளாசிக் ஓபன் போட்டியில் வெற்றி பெற்றதை அடுத்து, கேண்டிடேட்ஸ் செஸ் போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பு, தமிழகத்தை சேர்ந்த இந்திய கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு அதிகரித்துள்ளது. லண்டன் செஸ் கிளாசிக் ஓபன் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த இந்திய கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா பங்கேற்றார். 9 சுற்றுகள் முடிவில், பிரக்ஞானந்தா, செர்பியா கிராண்ட் மாஸ்டர் வெலிமிர் இலிக், இங்கிலாந்து கிராண்ட் மாஸ்டர் அமீத் காஸி ஆகியார் தலா 7 புள்ளிகள் பெற்றனர்.

டைபிரேக்கர் போட்டி இல்லாததால், இம் மூவரும் கூட்டு வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டனர். இதையடுத்து, பரிசுத் தொகை மூவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது. இந்த வெற்றியை அடுத்து, வரும் 2026ல் நடக்கவுள்ள கேண்டிடேட்ஸ் செஸ் போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பு பிரக்ஞானந்தாவுக்கு பிரகாசமாகி உள்ளது. கேண்டிடேட்ஸ் போட்டிக்கு தமிழகத்தை சேர்ந்த குகேஷ் தகுதி பெறாவிட்டாலும், நடப்பு சாம்பியன் என்ற முறையில், அப் போட்டியில் வெற்றி பெறும் வீரருடன், குகேஷ் மோதுவார்.

கேண்டிடேட்ஸ் செஸ் வெற்றியாளர்-நடப்பு சாம்பியன் குகேஷ் இடையே நடக்கும் போட்டியில் வெற்றி பெறுபவர், புதிய உலக சாம்பியனாக உருவெடுப்பார். கேண்டிடேட்ஸ் செஸ் போட்டிக்கு, அமெரிக்காவை சேர்ந்த பேபியானோ கரவுனா, நெதர்லாந்து கிராண்ட் மாஸ்டர் அனீஷ் கிரி, ஜெர்மனி கிராண்ட் மாஸ்டர் மாத்தியாஸ் புளுபாம், உஸ்பெகிஸ்தான் வீரர் ஜவோகிர் சிண்டாரோ, சீன கிராண்ட் மாஸ்டர் வெ யி, ரஷ்ய கிராண்ட் மாஸ்டர் ஆந்த்ரே எஸிபென்கோ உள்ளிட்டோர் இதுவரை தகுதி பெற்றுள்ளனர்.

Tags : Praggnanandhaa ,Candidates Tournament ,London ,London Chess Classic Open ,Candidates Chess Tournament ,Indian Grand Master ,Tamil Nadu ,
× RELATED அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்பு காங்கோ,...