- திருப்பரங்குன்றம் மலை
- அமைச்சர்
- சேகர்பாபு
- சென்னை
- தொண்டு அமைச்சர்
- டிரஸ்ட்கள்
- பி.கே.சேகர்பாபு
- திமுக
- இளைஞர் செயலாளர்
- துணை முதலமைச்சர்
- உதயநிதி ஸ்டாலின்
- சென்னை கிழக்கு மாவட்ட இளைஞ
- வடக்கு
சென்னை: ஆண்டவனிடத்தில் ஆன்மிகத்தை வளருங்கள், அபாயத்தை வளர்க்காதீர்கள் என்று அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறினார். திமுக இளைஞரணி செயலாளர் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை கிழக்கு மாவட்ட இளைஞரணி சார்பில் வட இந்தியர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி பாரிமுனை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஜெகதீஷ் தலைமை வகித்தார். அமைச்சர் பி.கே.சேகர்பாபு முன்னிலை வைத்தார். இதில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் பங்கேற்று 800 வட இந்தியர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
பிறகு அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேசியதாவது: கடந்த 3 நாட்களாக தமிழகத்தில் நடக்கும் அரசியல் சூழ்நிலையை நன்றாக அறிவீர்கள். முதலமைச்சராக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு எனக்கு வாக்களித்தவர்கள் பெருமைப்படும் விதமாகவும், வாக்களிக்காதவர்கள் இவருக்கு வாக்களிக்க தவறி விட்டோமே என்று நினைக்கும் அளவுக்கும் என் ஆட்சி நல்லாட்சியாக இருக்கும் என்று கூறினார். அதன் பொருள் எல்லோருக்கும் எல்லாம் என்பதுதான் இந்த ஆட்சி. நீங்கள் பெருவாரியான ஆதரவை எங்களுக்கு வழங்காவிட்டாலும் உங்களுக்கு எங்கள் ஆதரவை அளிப்போம்.
இன்றைக்கு நாட்டிலே மதத்தால் மொழியால் இனத்தால் மக்களை பிளவுபடுத்தும் சக்திகள் ஊடுருவி தலைதூக்கிக் கொண்டிருக்கின்றன. எந்த ஒரு நாடாக, அரசாக இருந்தாலும் கடந்த இரண்டு மூன்று நாட்களாக நடந்த சம்பவத்தில் தலை கவிழ்ந்திருப்பார்கள் அல்லது அடி பணிந்து இருப்பார்கள். ஆனால், நேர்கொண்ட பார்வையோடு யாருக்கும் அஞ்சாமல் தன் இன மக்கள் சகோதரத்துவத்தோடு வாழ்வதற்கு எதை வேண்டுமானாலும் பறிகொடுக்க தயாராக இருப்பேன் என்று உறுதியாக மத நல்லிணக்கத்தோடு இருந்தவர் நமது முதல்வர். வடநாட்டில் ராமரை வைத்து லாபம் பார்த்தவர்கள், இங்கே முருகனை கையில் வைத்து ஆட்டம் போட பார்க்கிறார்கள்.
2021ல் வேலை கையில் சுமந்து பார்த்தார்கள். அது நடக்கவில்லை. 2024 நாடாளுமன்ற தேர்தலிலும் அரங்கேற்ற பார்த்தார்கள் முடியவில்லை. தற்போது காவடி, வேல், அரோகரா என்கிறார்கள். நீங்கள் என்ன கூப்பாடு போட்டாலும் தமிழ் கடவுள் முருகன் எங்கள் முதல்வருக்கு சொந்தமானவர் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். மத நல்லிணக்கம் பேணும் ஒரு ஆட்சி நடக்கிறது என்றால் அது திராவிட மாடல் ஆட்சி, நமது முதலமைச்சரின் ஆட்சி, ஆண்டவனிடத்தில் ஆன்மிகத்தை வளருங்கள், அபாயத்தை வளர்க்காதீர்கள். வட இந்திய மக்களே, உங்களுக்கு தொழில் பாதுகாப்புக்கு திராவிட மாடல் அரசு துணை நிற்கும். இவ்வாறு அவர் பேசினார். அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசுகையில், ‘‘எந்த செயலை செய்தாலும் அதை தைரியத்தோடு செய்து வருகிறார் தமிழ்நாடு முதல்வர், இந்தியாவின் பல்வேறு விளையாட்டுகளை தமிழ்நாட்டில் விளையாடக் கூடிய வகையில் ஏற்படுத்தி வருகிறார் துணை முதல்வர்’’ என்றார்.
