×

அறுவடை இயந்திரங்களுக்கு கூடுதலாக வாடகை வசூல் செய்தால் கடும் நடவடிக்கை

தஞ்சை, ஜன.12: நடப்பு சம்பா, தாளடி பருவத்தில் அறுவடை இயந்திரங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட வாடகையைவிட கூடுதலாக விவசாயிகளிடம் வசூல் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் எச்சரிக்கை விடுத்துள்ளார். தஞ்சை மாவட்டத்தில் சம்பா மற்றும் தாளடி நெல் அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தனியார் நெல் அறுவடை இயந்திரங்களின் வாடகையை முறைப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் தஞ்சை மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் தலைமையில் விவசாயிகள் சங்க பிரநிதிகள், அறுவடை இயந்திரங்களின் உரிமையாளர்கள், அரசு அலுவலர்கள் இணைந்த முத்தரப்பு கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அனைவராலும் ஏற்று கொள்ளப்படும் வகையில் ஒருமித்த கருத்து உருவாக்கப்பட்டு பெல்ட் வகை அறுவடை இயந்திரங்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.2.100, டயர் வகை அறுவடை இயந்திரங்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.1.600 என வாடகை நிர்ணயம் செய்யப்பட்டது. மேலும் வைக்கோல் கட்டும் இயந்திரத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை காட்டிலும் கூடுதலாக வசூல் செய்ய கூடாது. நிர்ணயிக்கப்பட்ட வாடகையை விட கூடுதலாக விவசாயிகளிடமிருந்து வசூல் செய்யப்படுவதாக புகார் வந்தால் நெல் அறுவடை இயந்திரங்களின் உரிமையாளர்கள் மீது போக்குவரத்து துறை மற்றும் காவல்துறையின் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tags :
× RELATED வாடகை செலுத்தாத 5 கடைகளுக்கு சீல்