திருத்தணி, டிச.3: டிட்வா புயல் தொடர் மழை காரணமாக திருத்தணி முருகன் கோயிலில் பக்தர்கள் வருகை வெகுவாக குறைந்து காணப்பட்டது. முருகப்பெருமானின் ஐந்தாம் படை வீடாக சிறந்து விளங்கும் திருத்தணி முருகன் கோயிலுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்கள் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். குறிப்பாக விழாக்கள், சுப முகூர்த்த நாட்கள், விடுமுறை நாட்கள் மற்றும் முருகப்பெருமானை தரிசிக்க உகந்த நாளான செவ்வாய்க்கிழமை ஆகிய நாட்களில் பக்தர்கள் கூட்டல் அலைமோதும். பக்தர்கள் பலரும் தங்களது குடும்பத்தினருடன் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்வர்.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில், சமீபத்தில் உருவான டிட்வா புயல் காரணமாக கடந்த 3 நாட்களாக திருத்திணியில் பல்வேறு இடங்களிலும் பரவலாக தொடர் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இடைவிடாது பெய்து வரும் சாஅல் மழையால் செவ்வாய்க்கிழமையான நேற்று திருத்தணி முருகன் கோயிலுக்கு பக்தர்கள் வருகை வெகுவாக குறைந்து காணப்பட்டது. பொது வழியில் சுமார் அரை மணி நேரத்தில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். வரிசையில் நீண்ட நேரம் காத்திருக்காமல் நேரடியாக கோயிலுக்குள் சென்று மூலவரை மற்றும் வள்ளி, தெய்வானை, உற்சவர், சண்முகரை பக்தர்கள் மகிழ்ச்சியுடன் தரிசனம் செய்து வழிபட்டு செல்கின்றனர்.
பச்சரிசி மலையில் இன்று மகா தீபம்: திருத்தணி முருகன் கோயிலில் இன்று கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படுகிறது. இதையொட்டி நேற்று மாலை கோயிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. முதலில் மலைக்கோயில் மாட வதியில் வள்ளி தெய்வானையுடன் சமேத உற்சவர் முருகப்பெருமான் எழுந்தருளி, எதிரில் சொக்கப்பனையில் கோயில் தலைமை அர்ச்சகர் தீபம் ஏற்றி வைக்கிறார். தொடர்ந்து, கோயிலுக்கு வடக்கு திசையில் சுமார் 500 அடி உயரத்தில் உள்ள பச்சரிசி மலையில் 150 கிலோ நெய்யுடன் மகா தீபம் ஏற்றப்படுகிறது. மகாதீபம் தரிசனம் செய்த பின்னர் திருத்தணி சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள வீடுகளில் பெண்கள் தீபம் ஏற்றுவார்கள். பச்சரிசி மலையில் தொடர்ந்து மூன்று நாட்கள் மகா தீபம் பிரகாசிக்கும்.
